Sonntag, 27. April 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...5





















திரைக்கடலோடி
இலக்கியம்தேடி..5


ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தாள். 
நாளாந்தம் வடைசுட்டு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் அவள் தன் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவள் வடைவிற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு காகம்  அவளிடமிருந்த வடைகளில் ஒன்றைத் திருடிக்கொண்டு பறந்துபோய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்தது.
அந்த நேரம் பார்த்து அவ்வழியே வந்த நரி ஒன்று அந்தக் காகத்திடமிருந்த வடையைத் தான் பறித்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தது.
உடனே காகத்தைப் பார்த்து, “காக்கையாரே காக்கையாரே உமது குரல் மிகவும் இனிமையானது என்று எனக்குத் தெரியும். உமது அழகான வாயால் எனக்காக ஒரு பாட்டுப் பாடும். கேட்க ஆசையாக இருக்கிறது!” என்றது.
நரியின் புகழ்ச்சியில் மதிமயங்கிய காகமும் தன் கடுங்குரலில் “கா..கா!” என்று பாடுவதற்காக வாயைத் திறந்தது. அதன் வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்துக்கொண்டு ஓடியது.
- இது சிறுவயதில் நாங்கள் படித்த அல்லது கேட்ட கதை.

நமக்கு முன்னவர்கள் சொன்ன இந்தக் கதையை நாம் எத்தனை முறை கேட்டிருப்போம் என்பதற்கு ஒரு எண்ணிக்கை சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை முறை கேட்டிருப்போம்.
இப்போது நமது அடுத்த தலைமுறைக்கும் இதனைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் நாம்.

(ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இது பாட்டாகவும் வந்தது.
பாப்பா பாப்பா கதைகேளு
காக்கா நரியின் கதைகேளு!
தாத்தா பாட்டி சொன்ன கதை 
அம்மா அப்பா கேட்டகதை .. என்று தொடரும் பாடல் )


குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லும்போது அது சுவாரஸ்யமானதாகவும், குழந்தைகளுக்கு அறிவூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்று நமது ஆன்றோர்கள் சொல்லிவைத்த பல கதைகளில் இதுவும் ஒன்று.
கதையைச் சொல்லி முடித்ததும் இந்தக்கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்ற கேள்வியும் அவர்களிடமிருந்து வரும்.
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த நீதியைச் சொல்வார்கள்.

இந்தக் காகமும் நரியும் கதையை இங்கே நான் சொல்ல வந்தது ஏன் என்ற கேள்வி எழலாம். 
அண்மைக்காலமாக இந்தக் கதை பல அறிவாளிகளுக்கு ஒருவகைக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுமாதிரிக் கதைகளை எழுதியவர்களை அல்லது சொன்னவர்களை மடையர்களாகச் சித்தரிப்பதில் அவர்கள் மகிழ்கிறார்கள். இந்தக்கதை சொல்லப்பட்டதன் நோக்கத்தையோ அல்லது இந்தக் கதையைக் கேட்பதால் இளையோருக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சியையோ அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

“நீ ஒருவரை ஏமாற்றினால் நீ இன்னொருவரால் ஏமாற்றப்படுவாய்!” என்பதையும்- 
“உன்னால் திருடப்பட்ட பொருள் ஒருபோதும் உனக்கு உதவாமல் போகும்!” என்பதையும்-
“வெறும் புகழ்ச்சிக்கு மயங்கினால் உன்னிடமிருப்பதை நீ இழக்கவேண்டி வரும்!” என்பதையும்.-
நமது இளவயதிலேயே நமக்குக் கற்பிப்பதற்கு இந்தக் கதை உதவுகிறது.

புரிந்தவர்கள் கற்றுக்கொள்வார்கள். புரியாதவர்களோ விமர்சனங்கள் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

எந்தப் படைப்பும் ஒரு நல்ல நோக்கத்தோடுதான் படைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாக, போட்ட முதலுக்கு வட்டியோடு திரும்ப எடுத்துவிட வேண்டும் என்ற வர்த்தக நோக்கத்தோடு திரைப்படங்கள் தயாரிப்பவர்கூட தமது படைப்புக்கள் தரமானவையாக, பாராட்டுப் பெறுபவையாக இருக்க வேண்டும் என்ற ஆத்மதாகம் கொண்டவராகவே இருப்பார்.

காக்கா நரி கதையைப்போல முன்பு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதென்பது திரையுலகிலும் அடிக்கடி நிகழ்கிறது. நிகழ்ந்தாகவும் வேண்டும். 
அரிச்சுவடியில் ஆரம்பிக்கிற நாம் வளரவளர கற்றுக்கொண்டே போகிறோம். நாம் அதிகம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்பதற்காக புதிதாகப் பிறக்கும் மழலைகளுக்கான கல்வியை நாம் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது. அவர்களும் அரிச்சுவடியிலிருந்துதான் ஆரம்பித்தாகவேண்டும்.

திரைப்படங்கள் தமக்கு ஏற்றதான ஒரு அடிப்படை இலக்கணத்தை வகுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இலகுவாக அவை விடுபட்டுவிடமுடியாது.

திரைப்படம் எனும் கலைவடிவம் பெரும்பாலும் அழகியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கருத்தியல் என்பது இரண்டாம் பட்சம்தான் எனினும் அழகியலோடு கருத்தியலைப் பிணைத்துவிடவேண்டும் என்ற வேகம் எல்லாக் கலைஞர்களிடத்தும் இருக்கிறது.

நல்லவனான ஒரு கதாநாயகன், அக்கிரமக்காரனான ஒரு எதிராளி, அவனுக்கு ஒரு அழகான மகள், கதாநாயகனுக்கும் இவளுக்குமிடையே காதல், போராட்டம், என்று உருவாகிற திரைக்கதையில் நான்கு பாட்டுக்கள், மூன்று சண்டைகள் என்று ஒரு திரைப்படம் முழுமை பெறும்.

ஒரே கதையை வெவ்வேறுவிதமாகச் சொல்லி வெற்றிபெறுவதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போன்ற கலைஞர்களால் முடிந்திருக்கிறது. கதை எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாழ்க்கையின் அடித்தளத்தில் நிற்கிற ஏராளமான இரசிகர்களுக்கு வாழ்க்கையில் ஒருவித நம்பிக்கையை ஊட்ட அவை தவறவில்லை.

வசனங்களிலும் பாடல்களிலும் இலக்கியத்தன்மை கலந்திருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அக்கறை நுணுக்கமாகப் பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ளத் தக்கது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, கவியரசு கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கவிஞர் வாலி என்று சிறந்த இலக்கியவாதிகள் பலரும் இலக்கியத்தன்மைமிக்க அவர்களது பாடல்களால் எம்ஜீஆரின் உருவத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நிலைத்துவிட்டார்கள்.



ஏராளமான சமூகப் படங்களிலும் எம்.ஜீ. ஆர் நடித்திருந்தபோதும் அவர் சொந்தமாகத் தயாரித்தவை சரித்திரப்படங்களே. நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற படங்களில் தனிமனித விடுதலை, சமூக விடுதலை, பெண்விடுதலை என்பவற்றை அதிகமாகச் சித்தரித்திருந்தார்.
மன்னன் வேடம் தாங்கியவர், நாம் வாழும் காலத்தில் ஒரு மன்னனாகவே வாழ்ந்தும் மறைந்திருக்கிறார். மக்களை நேசிப்பவராக நடித்தவர் உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் மக்களை நேசிப்பவராக வாழ்ந்தும் காட்டினார்.
அவரது சரித்திரத் திரைப்படங்கள் கற்பனைக் கதைகளாக இருந்தாலும் அவை நிஜமான பாத்திரங்களே என்று எண்ணத்தக்கவையாக இரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துக்கொண்டபோதே அவரது படைப்புக்களும் இலக்கியத்தன்மை பெற்றுவிடுகின்றன.
தான் நடிக்கும் படங்களுக்கான கதையைத் தேர்வுசெய்வதில் எம்.ஜி.ஆர் எவ்வளவுதூரம் அக்கறைகாட்டினாரோ அதற்கும் பலமடங்கு மேலாக அவரது படங்களுக்கான பாடல்களில் அவர் அக்கறை காட்டுவார் என்று சொல்வார்கள். மொழிப்பற்றும் இலக்கிய ஆர்வமுமுள்ள ஒருவரால்தான் இது சாத்தியமாகும். இலக்கியநயம் செறிந்த ஏராளமான பாடல்கள் அவரது படங்களில் நிறைந்து கிடக்கின்றன.