திரைக்கடலோடி இலக்கியம் தேடி -6
வாழ்க்கை என்பது ஒரு தொடர்கதை.
முதல்மனிதன் உருவானபோது தொடங்கிய வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வோர் அத்தியாயங்களாகத்தான் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாழ்க்கையை எவரும் முழுமையாக வாழ்ந்து முடித்துவிடவில்லை.
நேற்றைய மனிதர்களின் எச்சங்களாய் இன்றைய மனிதர்கள்.
இன்றைய மனிதர்களின் எச்சங்களாய் நாளைய மனிதர்கள்.
இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை என்பது நேற்றைய நம்மவர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கையின் தொடர்ச்சி. இன்று நாம் விட்டுச் செல்வதை நாளைய நம்மவர்கள் தொடரப் போகிறார்கள். இவ்வளவுதான் வாழ்க்கை.
எதிலும் முழுமை பெறாமல் முழுமை பெற்றதாகத் தோன்றுகின்றவற்றிலும் நிறைவு பெறாமல் முழுமையைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம்.
இந்த நிலை நமது வாழ்வோடிணைந்த கலை இலக்கியங்களுக்கும் உண்டு.
“முழுமையாக வாழ்ந்து முடித்த மனிதன் யார்?” என்ற கேள்வி எழுந்தால், “அவன் இன்னும் பிறக்கவில்லை!” என்பதே பதிலாக இருக்கும்.
இதுபோல் “முழுமையான இலக்கியம் எது?” என்று கேட்டால் அது இன்னும் படைக்கப்படவில்லை என்பதே பதிலாக இருக்கும். ஆக தேடலிலேயே தொடரும் வாழ்க்கை. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பதால்தான் எதிலும் நிறைவு காணாமல் எதற்காகவோ காத்திருக்கிறோம் நாம்.
திரைப்படங்களில் நமக்கு நிறைவுதருவதாய்த் தோன்றுகின்ற பல படங்களும் நிறைவு தராதவைகளின் பட்டியலில் போய்விடுகிறது என்பதற்குக் காரணமும் நமது இத்தகைய மனோநிலைதான்.
சிறுவயதில் நாம் வாசிக்கும் சித்திரக் கதைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பாத்திரங்கள் பேசும். பேசும் அவற்றின் உணர்வுகளை அவற்றின் முகங்கள் பிரதிபலித்துக்காட்டும்.
கதைகளில் இடம்பெறும் சித்திரங்களைப் போலவே திரைப்படங்களிலும் பாத்திரங்கள் பேசும். பல சந்தர்ப்பங்களில் அவற்றின் உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டுவதற்கென்றே பாடல்கள் பக்கத்துணையாய் வரும்.
கண்ணெதிரே திரைக்காட்சிகளில் தோன்றும் கதாபாத்திரங்கள், காட்சிகள் மறைந்தபின்னாலும் பாடல்கள்மூலம் நமது மனக்கண்ணில் அடிக்கடி தோன்றுகிறார்கள். அன்பு, பாசம், காதல், நட்பு என்று படரும் உறவுகளை, அவற்றின் விளைவான உணர்வுகளை ஒரு சிறந்த கலைஞனால் வெளிப்படுத்திவிட முடியும் என்றாலும் அதை மெருகேற்ற பாடல்கள் உதவுகின்றன.
“அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை!”என்று சௌந்தரராஜனும்,
“அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!” என்று யேசுதாசும்,
“என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பார்த்தா!” என்று இளையராஜாவும்
“நானாக நானில்லைத் தாயே!” என்று பாலசுப்பிரமணியமும் தாயன்பைப் பகிர்ந்துகொள்ளும்போது நமது மனதில் எழுகின்ற உணர்வுகளை அப்படியே சித்தரித்துக்காட்டும் பாத்திரங்களுக்கு உயிரூட்டுவது இந்தப் பாடல்கள்தானே.
“காதலைச் சித்தரிக்க தமிழ்ப்படங்களில் ஏன் இத்தனை ஆரவாரம். ஒரேயொரு முத்தத்தின் மூலம் காதலைக் காட்டிவிடமுடியாதா ?” என்று எவனோ ஒரு ஆங்கிலத் திரைக்கலைஞன் கேட்டதாக அறிந்திருக்கிறேன்.
தமிழரின் வாழ்விலும் சரி, காவியங்களிலும்சரி காதல் பெற்றிருக்கும் இடம் மிகவும் உயர்வானது. வெறும் உடலோடுமட்டும் பூர்த்தியாகாத, உயிரில் கலந்த உணர்வாக அது போற்றப்படுவது.
அதனால்தான் தமிழ்த்திரைப்படங்களிலும் இத்தனை ஆரவாரம்.
(காதல் இல்லாமல் வாழ்வே இல்லை என்றானபோது காதல் இல்லாமல் தமிழ்ப்படமாவது?!)
வாழ்வின் பல்வேறு நிலைகளையும் சித்தரிக்கும் பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் நிறைந்திருப்பதுகூட அவற்றின் இலக்கியத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன.
பாபநாசம்சிவன் முதல் பா.விஜய்வரை நான் அறிந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் எல்லோரும் இலக்கியம் படைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எத்தனையோ பழந்தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இன்றும் அவற்றின் இலக்கியச்சுவை காரணமாக எம்மிடையே நிலைத்திருக்கின்றன என்பதே இதற்குப் போதுமான சாட்சி.
எம்.ஜிஆரின் திரைப்படங்களில் வந்த பாடல்களில் கவிதையும் இலக்கியமும் கலந்துநிற்கும் எண்ணற்ற பாடல்களில் ஓர் பாடல்:
..தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டுப் புண்பட்ட நெஞ்சத்தில்
உன்பட்டுக் கைபடப் பாடுகிறேன்.
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் நிலவே நில்!
(பாடல்வரிகள்: பஞ்சு அருணாசலம்)
காதல் பாடல்களைப் போலவே, காதல்பருவம் கடந்ததும் சித்தாந்தங்களுக்குள் வீழ்ந்துவிடும் மனிதனின் நிலையையும், வாழ்வில் அவன் கற்றுக்கொண்ட அனுபவங்களால் விளையும் விரக்தியையும் அதற்கான ஆறுதலையும் தரும் பாடல்களும்; ஏராளம்.
“பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள்போல்.. ” என்று கவலைப்பட்ட தியாகராஜ பாகவதர்,
“ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான்!” என்று சலித்துக்கொள்ளும் பி.பி.சிறீனிவாஸ்,
“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!” என்று ஆறுதலளிக்கும் சித்ரா, இப்படி அன்று முதல் இன்று வரை எண்ணற்ற பாடல்கள் இலக்கிய நயத்தொடு இதயங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
அமைதியாக உட்கார்ந்து சில பாடல்களைக் கேளுங்கள். அவற்றில் எத்தனை பாடல்கள் உங்களைக் கவர்கின்றன என்று பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான பாடல்கள் என்று ஒரு பத்துப் பாடல்களைத் தேர்வு செய்வீர்களாயின் அவற்றில் எட்டுப் பாடல்கள் நிச்சயமாக இலக்கியத்தன்மை வாய்ந்ததாகவே இருப்பதைக் காண்பீர்கள்.
“ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல்தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கிவந்து சொல்லுங்கள்…