Sonntag, 8. Juni 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...7














-ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்
-இந்துமகேஷ்.


வாழும் காலத்தைப் பிரதிபலிக்கத் தவறுகிற படைப்புக்கள் அவற்றின் இலக்கியத் தன்மையையும் இழந்துவிடுகின்றன. யதார்த்தத்தைப் பேசுகிற அல்லது யதார்த்தத்தை வெளிக்கொணருகிற கதாபாத்திரங்கள் இலக்கியத் தன்மையைப் பெற்றுவிடுவதால் அவை காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன.

கலை, இலக்கியங்கள் எப்போதுமே இரண்டு விடயங்களைத் தம்முள் கொண்டிருக்கின்றன.
ஒன்று- மகிழ்வூட்டுவது. 
மற்றொன்று -மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவது.
இவற்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவை வெற்றிபெறுவதில்லை.

மகிழ்வூட்டும் கலையாகிய திரைப்படத்துறை வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கும்போதுதான் அது இலக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறது. வெறுமனே பொழுதுபோக்குக் கலையாகமட்டும் மாறிவிடாமல் அது நின்று நிலைக்கிறது.

திரைத்துறையின் வருகைக்கு முன்னான பண்டைய காலகட்டங்களில் தமிழ் இலக்கியம் பாக்களினூடேதான் வளர்ந்திருக்கிறது.

உரைநடைகளாக இலக்கியங்கள் மாற்றம் பெறுமுன் பாடல்களாகவே இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ  ஆரம்பகாலத் தமிழ்த் திரைப்படங்கள் பாடல்களுக்கு அதி முக்கியத்துவம் அளித்திருந்தன. இன்றுவரை அது தொடர்கிறது.
இனியும் அது தொடரும்.

“காதல் வீரம் சோகம் என்று எதைச் சொல்வதானாலும் ஒரு பாட்டு. இது இயற்கைக்கு மீறிய ஒரு காரியமில்லையா? இப்படிச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவன் பாடிக்கொண்டா இருப்பான்?” என்று பல மேதாவிகள் இப்போதும் கூப்பாடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் கூச்சல்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு தமிழ்ப்படங்களில் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இசை நமது வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு காரியமாகிவிட்டது என்பதே யதார்த்தம்.

நாம் மண்ணில் வந்து வீழ்ந்தபோது அழுகுரலிலேயே கச்சேரியைத் தொடங்கிவிடுகிறோம். அம்மா பாடும் தாலாட்டுப் பாட்டில் கண்ணயர்கிறோம். நம்மைப் படைத்தவனைப் பிரார்த்திப்பதற்கென்று பள்ளிக்கூடத்தில் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தேசியகீதம் என்று தேசத்துக்கு வணக்கம் சொல்லவும் பாட்டு. உள்ளம் கவர்ந்தவனை (அல்லது கவர்ந்தவளை) நினைத்துக்கொண்டு நின்றாலும் நடந்தாலும் குளித்தாலும் மனதினுள் ஆனந்தப்பாட்டு.

எல்லாம்முடிந்து கடைசிப்பயணம் புறப்படும்போது மற்றவர்குரலில் எழும் ஒப்பாரிப் பாட்டு.
பாட்டில்லாமல் வாழ்வாவது?
அதனால்தான் தமிழ்ப் படங்களிலும் பாட்டு.


இத்தனை ஆயிரக்கணக்கான பாடல்கள் உருவாகிவிட்டன.
ஏதேனும் ஒரு பாட்டில் தனது வாழ்வின் ஒரு நிகழ்வையாவது தரிசிக்காதவன் எவனுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லோர் வாழ்வோடும் திரைப்படப் பாடல்களும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தமிழின் இனிமையை நாம் சுவைப்பதற்கு தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வழி வகுத்திருக்கின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையை பாமரர்களும் சுவைப்பதற்கு வழிசமைத்தவை தமிழ்த் திரைப்படப் பாடல்கள்தாம்.
இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் இலக்கியச்சுவை மிகுந்தவையே.
அன்று அமரர் கல்கி அவர்கள் எழுதி இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்துக்காகப் பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் அதன் இலக்கியச்சுவையாலேயே இன்றும் இளமைமாறாதிருக்கிறது.
இலக்கியச் சுவைமிகுந்த எண்ணற்ற பாடல்கள் தமிழ்த்திரையுலகில் தமக்கெனத் தனிமுத்திரையைப் பதித்துநிற்கின்றன. 










மரபுக் கவிதைகள் என்ற வகைக்குள் அடங்கும் ஏராளமான பாடல்களைத் தந்த கவியரசு கண்ணதாசன்முதல் புதுக்கவிதை என்ற வகைக்குள் அடங்கும் கவிதைகளைப் பாடல்களாகத் தந்த கவிஞர் வைரமுத்துவரை பிரபலமான கவிஞர்களோடு அவ்வப்போது ஓரிரு பாடல்களைமட்டுமே வரைந்து அழகுபார்க்கும் இளங்கவிஞர்கள்வரை தமிழ்த்திரையுகில் இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள். வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அழகுதமிழ்ச் சொற்களை அடுக்கிவைத்து எழுத்துக்கோபுரம்கட்டும் திறன்வாய்ந்த பலர் தமிழ்த்திரையுகில் தடம்பதித்தபோதிலும் தனது எழுத்துக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக்கொண்ட டி.இராஜேந்தர் என்ற கலைஞனை ஒரு தனித்துவமான இலக்கியவாதியாக நான் காண்கிறேன்.

மொழியின் தனித்துவத்தை அதன் வார்த்தைகளாலேயே மற்றவர் மகிழத் தருவதில்; அவருக்கு இணை அவர்தான். அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அடுக்குமொழியில் உரையாடுவார்கள். சிலசமயங்களில் அது மிகைபடத்தோன்றினாலும் அவரது மொழி ஆளுமையில் அந்த மிகைப்படுதல் மறைந்துபோய் அதை நாம் இரசிக்க ஆரம்பித்துவிடுவது அவரது எழுத்துக்கான வெற்றியே.
திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் நடிப்பு என்று பலவிதத்திலும் அவர் தனது பணியை விரிவுபடுத்தினாலும் அவரது பாடல்களின்மூலம் அவர் தன்னை ஒரு இலக்கியவாதியாக நிலை நிறுத்தியிருக்கிறார்.





(ஜெர்மனியிலிருந்து வெளியாகும் வெற்றிமணி பத்திரிகையில்
2008 காலப்பகுதியில் வெளியான எனது கட்டுரைத்தொடர்)