Dienstag, 29. Juli 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...8


ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.
-இந்துமகேஷ்



„...வீரம் விலைபோகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்..!
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே
தூக்கிய ஈட்டியும் போதாது தோழர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் 
எடுத்துக் கொள்ளுங்கள்!“

-மேடையில் கிரேக்கத்துத் தத்துவஞானி சாக்ரடீஸ் பேசிக்கொண்டிருக்கிறார்.
மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது இரசிகர் கூட்டம்.

ஊருக்குள் அவ்வப்போது விழாக்கள் நடக்கும்.
பெரும்பாலான விழாக்களில் இடம்பெறும் முதன்மையான ஒர் அம்சம் -„ஓரங்க நாடகம்.“
அதென்ன ஓரங்கம்?
அந்தச் சொல்லும் அதன் பொருளும் அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.


ஒரு வரலாற்றின் அல்லது ஒரு கதையின் நாடகவடிவத்தின் ஒரு பகுதிதான் அது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

ஓரங்க நாடகங்கள் மூலம் ஊருக்குள் உலாவந்த அனார்க்கலி, சாக்ரடீஸ், சாம்ராட் அசோகன் சேரன் செங்குட்டுவன், ஒதெல்லோ, சத்தியவான் சாவித்திரி போன்ற கதாபாத்திரங்கள் உள்ளூர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான நடிப்பில் மேடைகளை அலங்கரித்தார்கள்.


வேற்றுமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் வடிவம் பெற்ற பாத்திரங்கள்கூட செந்தமிழ்பேசி சிலிர்க்க வைத்தார்கள்.
இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் தமிழ்த்திரைப்படங்களிலிருந்துதான் வெளிப்பட்டார்கள் என்பதும், இவர்கள் எல்லாம் தமிழ்த் திரைக் கதாசிரியர்களின் கைவண்ணமே என்பதும் பின்னர் நான் தெரிந்துகொண்ட செய்திகள்.

பராசக்தியின் நீதிமன்றக் காட்சியும், வீரபாண்டியக் கட்டபொம்மனின் வெள்ளைக்காரத் துரையுடனான விவாதங்களும் ஓரங்கநாடகங்களாக மாறி அந்தக்கால இளைஞர்களை வீர வசனம் பேசவைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஓரங்க நாடகங்களும் முகம் காட்டின.

ஒரு முழுநீளத் திரைக்கதைக்குள் கிளைக்கதைகளாய் இத்தகைய ஓரங்க நாடகங்கள்  இடம்பிடித்துக் கொண்டிருந்தன. 

தூயதமிழ் வசனங்களால் இதயங்களைக் கொள்ளையிட்ட இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் மூலமாகவே உயிர்பெற்றிருந்தன.

அனார்க்கலியின் நாயகனான சலீம் (இல்லறஜோதி), தத்துவஞானி சாக்ரடீஸ்(ராஜா ராணி),சாம்ராட் அசோகன் (அன்னையின் ஆணை), ஒதெல்லோ(இரத்தத் திலகம்), சேரன் செங்குட்டுவன் (ராஜா ராணி), சத்தியவான் சாவித்திரி(நவராத்திரி), சகுந்தலையின் நாயகன் துஸ்யந்தன்(எங்கிருந்தோ வந்தாள்), விடுதலைவீரன் பகத்சிங், யூலியஸ் சீசர், (ராஜபார்ட் ரங்கதுரை) என்று அவர் ஏற்ற பாத்திரங்கள் ஏராளம். அந்த ஓரங்க நாடகங்கள் மூலம் என்றுமே மறக்கமுடியாத நிலையில் இன்றும் அவர்கள் நம்மிடையே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..







புராண இதிகாசக் கதைகளினின்று சமூகக் கதைகளுக்கு தமிழ்த் திரையுலகம் முன்னிடம் கொடுத்த அந்த ஆரம்பகாலங்களில் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ஒரு படைப்பாளியாகவோ அல்லது நாடகக் கலைஞனாகவோ அல்லது இசைக்கலைஞனாகவோதான் சித்திரிக்கப்பட்டார்கள்.
கலை இலக்கியம் சார்ந்த கதாபாத்திரங்களை முக்கியமானவர்களாகக் கொண்டு கதை பின்னப்படும்போது அவர்களது வாழ்க்கையில் நாடகம் ஒரு பங்கு வகிக்கும். அவர்கள் எழுதுவதாகவோ நடிப்பதாகவோ ஒரு ஓரங்க நாடகம் திரைக்கதைக்குள் நுழைந்துகொள்ளும்.

கே.பாலசந்:தர் எனும் ஒரு அற்புதமான நாடகாசிரியர் பின்னர் திரைக் கதை வசனகர்த்தாவாகவும் இயக்குனர் சிகரமாகவும் உயர்ந்தவர். அவரது நீர்க்குமிழி, எதிர் நீச்சல் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற பல நாடகங்கள் பின்னர் அவராலேயே திரைவடிவம் பெற்றன. சராசரி மனிதவாழ்வில் இடம்பெறும் சம்பவங்களைக்கொண்டு
பின்னப்பட்ட கதைகளே ஆயினும் நுண்ணிய மன உணர்வுகளை அப்படியே அற்புதமாக வெளிக்கொண்டு வரும் அவரது ஆற்றல் அவரது படைப்புக்களை இரசிகர்களிடத்தே நிலை நிறுத்திவைக்க உதவியது.

அவரது பாத்திரங்களை ஏற்று நடித்த பல புதுமுகங்கள் பின்னாட்களில் பிரபலம் பெற்றதற்கு அவரது பாத்திரப் படைப்புக்களும் ஒரு முக்கிய காரணம்.

தன்னைத்தான் தரமான இரசிகனாக எண்ணிக்கொள்ளும் ஒருவன், „நான் பாலசந்தரின் படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்“ என்று சொல்லிக் கொள்வதன்மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு அவருக்கும் சிறப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.

திரைக்கதைகளில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களில் கே.பாலசந்தருக்குத் தனியிடம் உண்டு. அவரது கதைகளில் பெரும்பாலானவை  முற்றுப் பெறாதவை. ஒரு கதையின் முடிவிலிருந்து இன்னொரு கதையை நாம் ஆரம்பிக்கலாம் என்று கருதத் தக்கவகையில் அவரது கதைகள் இருக்கும். முடிவை இரசிகர்களிடமே அவர் விட்டு விடுவதும் உண்டு. 

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாதவர்களாய் தங்களைக் காட்டிக்கொள்கிற இரசிகர்கள் சிலர், தாங்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதையோ அல்லது யதார்த்தம் என்று எதைப் புரிந்தகொண்டிருக்கிறார்கள் என்பதையோ தெளிவுபடுத்துவதில்லை.

எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள் வந்துபிறந்து வாழ்ந்து முடித்துவிட்டுப்போன இந்த உலகத்தில் ஒருசில நூற்றுக்கணக்கானவர்களே பேர்சொல்ல வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் மற்றவர்கள் வாழ்வெல்லாம் அர்த்தமற்றதென்று சொல்லிவிட முடியுமா?
எல்லோரும் வாழவே முயற்சித்திருப்பார்கள். வாழ்ந்திருப்பார்கள். 

மர்மக்கதையாய் தொடங்கும் வாழ்க்கை, மாயாஜாலக்கதையாய் கற்பனைகளில்விரிந்து, பல சமயங்களில் சோகக் கதைகளாகவும் சிலசமயங்களில் நகைச்சுவைக் கதைகளாகவும் உருப்பெற்று மறுபடியும் மர்மக்கதையாகவே மடிந்துபோகிறது. இந்த இடைப்பட்ட வாழ்க்கைக் காலம் பெருமளவில் கற்பனைகளிலேயே கரைந்துபோய் விடுகிறது. அந்தக் கற்பனைகளையே திரையுலகம் பிரதிபலிக்கிறது.

கற்பனைகளில் வாழ்க்கையைக் காண்பவனுக்கு அது யதார்த்தம்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவனுக்கு அது கற்பனை.