Samstag, 6. Juli 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...




 திரைக்கடலோடி இலக்கியம் தேடி...!


அறிமுகம்..

இருட்டு!- 
 அது போதைகளின் தரிப்பிடம். 
மயக்கங்களின் பிறப்பிடம். 
எங்கே போதை இருக்கிறதோ எங்கே மயக்கம் இருக்கிறதோ அங்கே இருட்டு இருக்கிறது. 
எங்கே இருட்டு இருக்கிறதோ அங்கே போதை இருக்கிறது. 
எங்கே மயக்கம் இருக்கிறதோ அங்கே இருட்டு இருக்கிறது. 
ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவாறு இருந்தேயாகவேண்டும் என்பது காலத்தின் கட்டளை. 
வெளிச்சத்தைக் கண்டபின்னால் இந்த மயக்கங்களும் போதைகளும் அகன்றுவிடும் என்பதே யதார்த்தம். 

அன்னையின் கருவறையில் இருட்டில் மயங்கிக் கிடக்கிறோம். வெளியே இந்த வெளிச்சத்துக்கு வந்தபின்னாலும்; இருட்டு வந்துவிட்டால் இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. நித்திரை என்று அதற்குப் பெயர் சூடி அந்த மயக்கத்திலேயே இருந்துவிடுகிறோம். விழித்துக்கொண்டிருக்கும்போதோ போதைக்குள் தள்ளுகிற எண்ணங்கள் மனத்திலே இருட்டை வரவழைத்து விடுகின்றன. 

இருட்டுமனத்துக்கு தெளிவான எதையும் தேர்ந்துவிட முடிவதில்லை. அகப்பட்டதையெல்லாம் அப்படியே வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு அந்த மயக்கத்தையே வாழ்க்கை என்று கற்பனை பண்ணிக்கொண்டு காலத்தை விழுங்கிவிடுகிறோம். 

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் அல்லது மயக்கத்தில் இருக்கவே மனிதன் விரும்புகிறான். போதை தராத எதுவும் மயக்கம் தராத எதுவும் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை. 

அன்பு, பாசம், காதல், பக்தி இவைகள்கூட ஒருவகையான போதையிலேயே அவனை வைத்திருக்கின்றன. அவற்றிலிருந்து விலகிப்போகும்போது அவனது போதையும் விலகிப்போகிறது. போதை இல்லாதவன் வாழ்வு பாதை இல்லாத பயணமாக மாறிவிடுகிறது. 

 „மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ 
இனிக்கும் இன்ப இரவே நீ வாவா 
இன்னலைத் தீர்க்கவா!“ -
-அது ஒரு திரைப்படப்பாடலின் வரிகள்! 
- வெறும் காதலைச் சொல்லும் வரிகளா அவை? 
இருட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள ஆழமான உறவைச் சொல்லும் வரிகள் அவை. புரிந்தவனுக்கு இலக்கியம் புரியாதவனுக்கு...? 




திரைப்படங்களில் இலக்கியம் தேடும் என் விருப்பத்துக்கான முன்னுரை இது...  
திரைப்படங்களில் இலக்கியமா? 
என்ன சிரிக்கிறீர்கள்..? 
ஓ.. நீங்கள் எப்போதும் திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து சலித்துக்கொள்கிற இலக்கியவாதியா..? 
உங்களுடன்தான் நான் பேசவேண்டும்!

 -இந்துமகேஷ் 
















 திரைக் கடலோடி இலக்கியம் தேடி...! 
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்) 
-இந்துமகேஷ் 

1.

திரையரங்குக்கு வெளியே வரிசையாய்க் காத்திருக்கும் இரசிகர் கூட்டத்தினுள் ஒருவனாய் மணிக்கணக்கில் காத்திருந்து, நுழைவுச்சீட்டுப் பெற்று, உள்ளே போய் வசதியான ஒர் இருக்கையைத் தேடி அமர்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிமிரும்போது- 
அரங்கினுள் இருள் கவியும். 
பரந்து விரிந்த வெண்திரையில் ஒளிக்கற்றையினூடே வந்து விழும் நிழலுருவங்கள் புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். உள்ளிருக்கும் அந்த மூன்று மணிநேரமும் வெளியுலகத்தின் கவலைகளை மறந்து அந்த நிழலுருவங்களின் இன்ப துன்பங்களோடும் அசைவுகளோடும் இரண்டறக்கலந்து தன்னை மறந்திருக்கும் ஒரு சராசரி இளைஞனாய் நான். 


நடிகர் திலகம், மக்கள் திலகம், காதல் மன்னன் என்று தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள் திரையுலகைக் கட்டியாண்ட காலங்கள் அவை. 


நடிகையர் திலகமும், நாட்டியப் பேரொளியும், கன்னடத்துப் பைங்கிளியும் என்று அறியப் பட்டவர்களின் வரிசையில் ஜெயலலிதா கே.ஆர்.விஜயா என்று இரசிகர்களின் கனவுக் கன்னிகள் உலாவரத் தொடங்கியிருந்த பொழுதுகள் அவை. 

நான் சிறுவனாக இருந்தபோது ஊரிலிருந்து யாராவது யாழ்ப்பாணம் போய்விட்டு வருபவர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களிடம் நான் கேட்கும் முதலாவது கேள்வி- 
“என்ன படம் பார்த்தீர்கள்?” 
ஏதாவது ஒரு படத்தின் பெயர் அவர்களிடமிருந்து மகிழ்வுடன் வரும். 

யாழ்ப்பாணப் பட்டினம் என்றாலே அது ஓர் கனவுக்கோட்டம்போல் என் மனத்திரையில் விரியும். அங்கிருக்கும் திரையரங்குகளும், அவற்றின் வெளிப்புறங்களில் உயர்ந்து நிற்கும் திரைக் கலைஞர்களின் சித்திரங்களும், மெல்லிதாய் இருள்மூடும் மாலைப் பொழுதை அழகூட்டும் வண்ண விளக்குகளும் மட்டுமே யாழ்ப்பாணம் என்பதுபோல் ஒரு மயக்கம் என்னுள் எழும். 

அடிக்கடி படம் பார்க்கும் வாய்ப்புக்கள் எனக்கு இருந்ததில்லை. எப்போதாவது யாழ்ப்பாணம் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால் மட்டுமே படம்பார்ப்பதுண்டு. (எனது 5 அல்லது 6வயதில் என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்ற என் பெரியண்ணா, “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி!” என்றொரு படம் பார்க்க என்னையும் கூட்டிப் போயிருந்தாராம். அதில் வரும் ஒரு குகையைப் பார்த்து பயந்து நான் கதற படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்த அண்ணா அதற்குப் பிறகு என்னைப் படம்பார்க்க அழைத்துச் செல்வதில்லை என்று சொல்லிச் சிரிப்பார். நிஜத்திற்கும் நிழலுக்கும் வேறுபாடு தெரியாத பருவத்தில் நான் பார்த்த முதல்படம் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி") 


“படம் பார்ப்பது- அதிலும் இளம் பிள்ளைகள் படம்பார்ப்பது- அவர்களைப் பழுதாக்கிப்போடும்!” என்ற பரவலான அபிப்பிராயம் ஊருக்குள் நிலவி வந்தது. வாலிப வயதுக்குரிய கட்டுப்பாட்டை மீறிய சில இளைஞர் யுவதிகள் - அவர்கள் வேறு எந்த வகையில் வரம்பு மீறியிருந்தாலும்- “படம் பார்த்துக் கெட்டுப்போனார்கள்!” என்றே பேசப்பட்டார்கள்.

1960களில்    எனது ஐந்தாம் வகுப்புப் பரீட்சைமுடிந்து வந்த விடுமுறையின்போது கொழும்புக்குப் போகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கொழும்பில் நிறையத் தியேட்டர்கள் இருப்பதாக அறிந்திருந்ததால் அங்கே நிறையப் படங்கள் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் போன எனக்கு வீரபாண்டிய கட்டப்பொம்மன், படிக்காத மேதை, தெய்வப்பிறவி என்ற மூன்று படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 





கட்டப்பொம்மன் வெள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டபோதும், படிக்காதமேதை அவரது வளர்ப்புத் தகப்பனால் வீட்டைவிட்டுத் துரத்தப்படும்போதும்,
தெய்வப்பிறவி பத்மினி ஒரு காட்சியில் கலங்கி அழும்போதும் என்னையறியாமலேயே என் கண்களிலிருந்து கண்ணீர் புரளத் தொடங்கியிருந்தது. 

படத்தைப் படம் என்று எண்ணாமல், அது ஒரு பொழுதுபோக்கு என்று கருதாமல் அது சமூகத்தில் நடந்த நடக்கின்ற சம்பவங்களையே சித்தரிக்கின்றன என்ற உணர்வோடு அதைப் பார்க்கின்றபொழுதுதான் அதனை வெகுவாக இரசிக்க முடிகிறது. அத்தகைய இரசிகர்களாலேயே திரைப்படங்கள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. 

மேலோட்டமாக அதனை ஒரு பொழுதுபோக்காகமட்டுமே பார்க்கின்ற இரசிர்களிடத்தே அது எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதனாலேயே விமர்சகர்களால் தரமற்ற படங்கள் என்று ஒதுக்கப்படுகிற ஏராளமான படங்கள் வசூலை அள்ளிக் குவிக்கின்றன. 
ஒரு சில உயர்தர விமர்சகர்கள் நினைப்பதுபோல் உண்மையிலேயே அவை தரமற்றவைதானா? 

                                       

நல்லதும் கெட்டதும் சேர்ந்தது உலகம். நன்மையும் தீமையும் கலந்தது சமூகம். இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்க்கை. 

உலக வாழ்க்கை எப்போதுமே அவலங்கள் நிறைந்ததாகத்தான் இருந்துவந்திருக்கிறது. இதிலிருந்து மகிழ்ச்சியை மட்டும் தேர்ந்தெடுக்க முடிந்த மனிதர் மட்டுமே ஓரளவேனும் நிறைவான வாழ்வைக் கண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு காரியத்திலும் குறைகளைமட்டுமே தேடிக்கொண்டிருந்துவிட்டு நிம்மதி பெறாமல் மறைந்து போனவர்கள்தான் இந்த மண்ணில் ஏராளம். இதிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும். 

எல்லாத் துறைகளிலுமே குறை நிறைகள் உண்டு. 
ஆனால் அன்றுமுதல் இன்றுவரை குறைமட்டுமே பெரிதாகப் பேசப்படுகிற ஒரு துறை- திரைப்படத்துறைதான். 

இன்று ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை எவ்வளவு முக்கியமோ அந்தளவு தொலைக்காட்சியும் அவசியம் என்று எண்ணப்படுகிற அளவுக்கு காலம் மாறிப் போயிருக்கிறது. தொலைக்காட்சித் திரைகளை நிறைத்துக்கொண்டிருக்கிற திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் பேசுபொருளாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில்- பெரும்பாலானவர்களிடமிருந்த வருகின்ற ஒரே வகை விமர்சனம்- “திரைப்படங்கள் சீரழிந்து விட்டன!” 
ஆனால்- 
மெய்தானா அது? 
அதுவே மெய்யென்றால் அதனை அகற்றிவிட வேண்டியதுதானே! 
எவராலும் அது முடியாது. ஏனெனில் அவர்களது கருத்தில் உறுதியில்லை. ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும் நிறைகளே ஏராளமாக இருக்கின்றன. 
குறைகளைத் தவிர்த்துவிட்டு நிறைகளை நோக்கி நாம் பயணப்பட்டால் என்ன? 
(திரைக்கடலோடி இலக்கியம் தேடுவோமா?)

















அடுத்த அத்தியாயத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பக்திப்படங்கள்பற்றி எழுதுகிறேன். 

ஒன்று- நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த இரத்தக்கண்ணீர். 
மற்றது- பத்மஸ்ரீ கமலகாசன் நடித்த அன்பேசிவம். 

என்ன... இவைகள் பக்திப் படமில்லையே சமூகப் படங்கள்தானே என்கிறீர்களா? எனக்கென்னமோ இவைகள் பக்திப் படங்களாகத்தான் தெரிகின்றன. 

பக்தி இலக்கியங்கள் சொல்லவந்த கருத்துக்களை அழகாகச் சொல்லும் இந்த இரண்டு படங்களும் என்வரையில் பக்திப் படங்களே!

(தொடரும்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen