Donnerstag, 11. Juli 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...2











திரைக்கடலோடி இலக்கியம் தேடி..
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்)

-இந்துமகேஷ்


2.
பருவங்கள் மாறமாற இரசனைகளும் மாறுகின்றன.
மிகச்சிறிய வயதில் உணர்வற்ற பொம்மைகளோடு உறவை வளர்த்துக்கொண்டு இது என்னுடையது என்று உரிமைகொண்டாடி அதன்மீது பற்றுவைத்துப் பற்றிப் பிடித்துக் கொள்கிறோம்.

அறிவு தெளிய ஆரம்பிக்கும் பருவத்தில் பள்ளித் தோழர்களோடு பாசத்தைப் பரிமாறி அவர்களையே உலகம் என்று உறவாடிக் களிக்கிறோம்.
உயிரற்ற பொம்மைகளுக்குப் பதிலாக இப்போது உயிருள்ள உணர்வுள்ள நண்பர்கள் நண்பிகள் என்று உலகம் விரிகிறது.

வாலிபத்தில் காதல் கல்யாணம் என்று வளரும் உறவுகளினூடே பிள்ளை குட்டிகள் என்று பெருகி சமுதாய நீரோட்டத்தில் சங்கமிக்கிறோம்.
முதுமை எட்டிப் பார்க்கும்போது-
இதுநாள்வரை வாழ்ந்த வாழ்வின் நிகழ்வுகள் அவ்வப்போது மனத்திரையில் நிழற்படமாய் விரியத்தொடங்கிவிடுகிறது.
இன்பமும் துன்பமுமாய்க் கலந்து கரைந்துபோன காலங்கள்.






உங்களது பொழுதுபோக்கு என்ன? என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் பதில் வானொலி கேட்பது, படம் பார்ப்பது என்பதாகத்தான் இருக்கும்.

இலக்கியங்கள் மீதான வாசிப்பு அனுபவங்களிலிருந்து பார்த்தல் கேட்டல் என்னும் உணர்வுகளினூடாக இலக்கியங்களைக் காண வழிவகுத்ததில் வானொலிகளுக்கும் திரைப்படங்களுக்கும் பெரும்பங்குண்டு.

வாசிப்பு அனுபவங்களின்மூலம் நாம் சந்தித்த காவிய நாயகர்களையும் நாயகிகளையும் நாம் நமது கற்பனையுலகில் சந்தித்திருந்தபோது, அரிதாரம் பூசிய கலைஞர்கள் அந்தக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். பண்டைய இலக்கியங்களிலும் பாடப்புத்தகங்களிலும் நாம் சந்தித்த அனைத்துப் பாத்திரங்களுமே திரைப்படங்களின்மூலம் தம்மை நிலைநிறுத்திப் போயிருக்கிறார்கள்.

ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)முதல், பெரியார்(சத்யராஜ்)வரை  நம்முன் இப்போது நடமாடிக் கொண்டிருக்கிறார்களே!

திரைத்துறை சார்ந்த அனைத்துக் கலைஞர்களுமே- கதாசிரியன்முதல் படப்பிடிப்புக்கருவிக்கு ஒளிபாய்ச்சும் ஒளிக்கலைஞன்வரை- இந்தத் திரைக்கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு அயராது உழைத்திருக்கிறார்கள் உழைத்து வருகிறார்கள்.

அவர்களது அயராத உழைப்புத்தான் இன்று தமிழ்ததிரையுலகம் 75 ஆண்டுகளைக்கடந்து நூற்றாண்டினைநோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் உறுதுணைபுரிந்துவருகிறது.

எண்ணற்ற கலைஞர்களைத் தன்னுள் தாங்கிநிற்கும் திரைக்கடலில் இலக்கிய முத்துக்கள் நிறைந்தே கிடக்கின்றன.
அவற்றின் அருமைகளை அறிந்தவர்களும்கூட தத்தம் உணர்வுகளை மறைத்துக்கொண்டு திரைக்கடலில் முத்தா? என்று சிரிப்பதன்மூலம் தமது நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் புராண இலக்கியங்களின் கதாபாத்திரங்களே வெளிப்பட்டார்கள்.
சுதந்தரப் போராட்டக்காலம் முடிந்து சுதந்திரத்திற்குப் பின்னான திரைப்படங்களில் சமூக இலக்கியங்கள் தம்மை  இணைத்துக்கொண்டன.

ரோமியோ-ஜூலியட், லைலா - மஜ்னு, அம்பிகாபதி -அமராவதி என்று காதல் இலக்கியத்தின் கதாபாத்திரங்களின் வரிசையில் தமிழ்த் திரைப்பட உலகம் அறிமுகம் செய்து வைத்த தேவதாஸ் - பார்வதியும் இலக்கிய அந்தஸ்துப் பெற்று என்றும் வாழும் உயிரோவியங்களாக உருப்பெற்று விட்டார்கள்.

“..அலையும் நீர்மேவும் குமிழாதல் போலே
ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்

உறவும் ஊராரும் உற்றர் பெற்றாரும்
ஓடிடுவார் கூடவரார் நாம்செல்லும் நேரம்
மறைநூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம்காணும் சுகமே மாயம்..!
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம்காணும் சுகமே மாயம்!”
- தேவதாசின் குரல் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வு நிலையில்லாததுதான் ஆனால் காதல் நிலையானது என்று அதற்காகவே வாழ்ந்து முடித்த தேவதாஸ் காதல் இலக்கியத்தைச் சொல்லும் ஒரு கதாபாத்திரம்.
தமிழ்த் திரைப்பட உலகில் அவன் நிலையானவன்.



எது இலக்கியம் என்பதற்கு பல்வேறு வகையான விடைகள் உண்டு.
இன்னதுதான் இலக்கியம் என்று வரையறுத்துவிடமுடியாதபடி இயற்கையிலும் மனிதவாழ்க்கையிலும் பரவிக் கிடக்கிறது இலக்கியம்.

எழுதப்படிக்கத் தெரியாதவனும் இரசனையுணர்வு குன்றியிருப்பவனும்கூட தன் குழந்தையின் மழலைச் சிரிப்பில் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ளமுடியும்.
இயற்கையோடொட்டிய, மனிதவாழ்வோடு பின்னிப் பிணைந்த எல்லாக் காட்சிகளிலுமே இலக்கியம் உண்டு. அதனை இரசித்து அனுபவிப்பதற்கான உள்ளப்பாங்கு எல்லோரிடத்தும் இருப்பதில்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்து, ஒத்த இரசனையுள்ளவர்கள் தத்தமக்குள் சிறுசிறு குழுக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இலக்கிய வட்டங்களுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எழுதுகோல் ஏந்திய ஒவ்வொருவனும் தன்னை ஒர் இலக்கியவாதியாகவே எண்ணிக்கொள்கிறான். தன் படைப்புக்கள் இலக்கியத்தன்மை பெற்றுவிடவேண்டும் என்றே அவன் விரும்புகிறான்.
இதற்கு திரைக்கதாசிரியனும் பாடலாசிரியனும்கூட விதிவிலக்கல்ல.

திரைப்படம் என்பது ஒரு கூட்டுமுயற்சியாக இருந்தாலும் திரைக்கதாசிரியன் தன் விருப்பப்படியே தன் எழுத்துக்கள் உயிர்பெறவேண்டும் என்று எண்ணுகிறான். அவனது எழுத்துக்கு உயிரூட்டும் பொறுப்பு இயக்குனரைச் சார்ந்ததாகிறது..

ஒருவர் கதைவசனம் எழுத, இன்னொருவர் இயக்கும் படங்களுக்கு மத்தியில் தானே கதைவசனம் எழுதி அதை இயக்கும் இயக்குனர்கள் பலர் உருவானார்கள்.
எனது இளமைப்பருவத்தில்-
நானறிந்த சிறந்த கதாசிரியராகவும் இயக்குனராகவும் முதலில் தோன்றியவர் இயக்குனர் ஸ்ரீதர்.
கல்யாணப்பரிசு, நெஞ்சிலோர் ஆலயம், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களின் வெற்றியில் ஸ்ரீதரின் பெயர் புகழேணிக்குப் போனபோதுதான் அவரை நான் அறிந்தேன்.

நெஞ்சம் மறப்பதில்லை, ஊட்டிவரை உறவு, சிவந்தமண், வெண்ணிறஆடை, நெஞ்சிருக்கும்வரை, சுமைதாங்கி, கலைக்கோயில் என்று தொடர்ந்த அவரது கலைவண்ணங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பினைப் பெற்றாலும் காதல்இலக்கியம் படைத்த அவரது கல்யாணப் பரிசு, நெஞ்சிலோர் ஆலயம், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை. கலைக்கோயில் என்பன என்வரையில் இலக்கியத்தன்மை மிகுந்த படங்களாக எண்ணத்தக்கவை.




திரைக்கதையில் காதல் இலக்கியம் படைத்தவர்களில் இயக்குனர் ஸ்ரீதர் என்றும் முதலிடத்திலேயே இருக்கிறார். இருப்பார்.

 “ஆழ்கடலில் நமது சிறியதோணி
கலையுலகில் நமது புதிய பாணி!” என படகுச்சின்னம் பதித்து சித்தராலயாவின்மூலம் திரைக்கடலில் வலம்வந்த ஸ்ரீதர் இலக்கிய முத்துக்களை எடுத்துவரத் தவறவில்லை.

அவரது திரைக்காவியங்கள் அவரது சிறப்பிடத்தை காலகாலத்துக்கும் பாதுகாக்கும்.



Keine Kommentare:

Kommentar veröffentlichen