3.
இலக்கியத்துக்குப் பல முகங்கள் உண்டு.
அதிலொன்று பக்தி இலக்கியம்.
அதிலொன்று பக்தி இலக்கியம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்பகாலங்களில் பக்தி இலக்கியமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அந்தக் காலங்களில் காளிதாஸ் முதலாக தொடர்ந்து புராணங்கள் இதிகாசங்களில் உலாவந்த கதாபாத்திரங்கள்தாம் பெருமளவில் தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்தினர்.
சிறுவயதில் பாடப்புத்தகங்களில் நான் அறிந்த பல கதாபாத்திரங்கள் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த்திரைப்படங்களில் வலம் வந்திருக்கிறார்கள்.
அந்நிய நாட்டவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் விடுதலை வேட்கை மிகுந்திருந்த காலகட்டத்தில் அந்த விடுதலை உணர்வை எழுத்துக்களினூடாக இலக்கியத்தினூடாக கலைகளினூடாக சமூகத்தினுள் எடுத்துவர இயலாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் கலைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன.
விடுதலை என்பது சுதந்திர வாழ்வுக்கான புற விடுதலை என்பதாகமட்டும் இருந்துவிடாது அது அகவிடுதலைக்கானதுமாக அமைய வேண்டும் என்பதில் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தீவிரமாக இருந்திருக்கவேண்டும். அத்தகைய ஆன்மீக விடுதலையைச் சித்தரிக்கின்ற படைப்புக்களை உருவாக்கியவர்கள் ஆன்மீக விடுதiலையைச் சித்தரிக்கின்ற பாத்திரங்களின் வாயிலாக சமூக தேச விடுதலையையும் மறைமுகமாக எடுத்துவந்தார்கள்.
சுதந்திர உணர்வை வளர்த்தெடுத்தார்கள். பக்தி இலக்கியங்கள் அதற்குக் கைகொடுத்தன.
பக்தி இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு அமைந்த படங்கள் பக்திப்படங்கள் என்ற வகைக்குள் அடங்கின. பின்னர் அதிகளவிலான சமூகப்படங்களின் வரவு பக்திப்படங்களின் வருகையைக் குறைத்தன. இருப்பினும் சமூகப் படங்களுக்குள் பக்திநெறி வளர்க்கும் படங்களும் அவ்வப்போது உருவாகவே செய்தன.
புராணக் கதைகளை அதிகமாகத் திரைப் படமாக்கியவர்களில் திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என்று தொடரும் ஒரு நீண்ட பட்டியலின் சொந்தக்காரார் அவர்.
சமூகக் கதைகளினூடே பக்தி இலக்கியத்தை வளர்த்தவர்களில் சாண்டோ எம். எம். சின்னப்பா தேவர் முதலிடத்தில் இருக்கிறார். தெய்வம், துணைவன் போன்று முருகன் பெருமை பாடுவதற்கென்றே படங்களைத் தயாரித்தவர் அவர்.
0
எல்லாப் படங்களையும் எல்லாப் பருவத்தினரும் பார்த்துவிடமுடியாதவாறு ஒரு எழுதப்படாத விதி எம்மவரிடையே கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலமும் இருந்தது.
அந்தநேரத்திலும் எல்லாப் பருவத்தினரும் பார்க்கத் தக்கவையாக பக்திப் படங்கள்மட்டுமே அமைந்தன. பள்ளி மாணவர்களுக்கென காட்சி நேரங்கள் ஒதுக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களில் பெரும்பாலானவை பக்திப் படங்களே.
பள்ளிமாணவர்களாகிய நாங்கள் படம் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டால் அது திருவிளையாடலாகவோ சம்பூர்ண ராமாயணமாகவோ அல்லது வேறேதாவது பக்திப்படமாகவோதான் இருக்கும்.
பக்திப் படங்கள் தவிர்ந்த ஏனைய படங்கள் அதிகமாய்க் காதலையும் மேல்நாட்டு நாகரீகத்தையும் மிகைப்படுத்திக் காட்டி சமுதாயத்தில் நஞ்சை விதைக்கின்றன என்ற கருத்து பெரியவர்களிடம் ஆழப்பதிந்திருந்தது.
அதனால் இளைய சமுதாயத்தை அவர்கள் அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
வயது வந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளத் தக்க உண்மைகளை வயது வந்தபிறகு இவர்களும் புரிந்துகொள்ளட்டும் எனறு அவர்கள் எண்ணிக்கொண்டார்களோ என்னமோ!
எந்த ஒரு திரைப்படமும் - அது சண்டைப்படம் குடும்பப்படம் பக்திப்படம் சரித்திரப்படம் திகில்படம் என்று எதுவாக இருந்தாலும் எல்லாப் படமும் -ஏதோ ஒரு செய்தியைத் தன்னுள் கொண்டிருந்தது.
ஆனால் ஒவ்வொன்றையும் இரசிப்பதிலும் புரிதலிலும் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்பவே அது நல்லது என்றோ நல்லதில்லை என்றோ தீர்மானித்தார்கள்.
ஒருபுறம் பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்க மறுபுறம் பக்தி இலக்கியத்தை நையாண்டி செய்யும் படங்களும் உருவாகத் தொடங்கின.
தனிமனிதனையோ சமுதாயத்தையோ நெறிப்படுத்தும் சட்ட திட்டங்களினூடே அவ்வப்போது ஒருசில தவறுகளும் இடம்பெற்றுவிடுவது இயல்புதான் என்றாலும் அத்தகைய தவறுகளைமட்டுமே பெரிதுபடுத்தி சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்தி ஆன்மீக சிந்தனைக்கான அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கவும் சில கதாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவை வெறும் நகைச்சுவைக் காட்சிகளாகவே போய் மறைந்திருக்கின்றன.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிப்பெனும் இலக்கியமாகத் திகழும் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்ற தலைசிறந்த ஒரு கலைஞனை முதலில் வெளிக்கொணர்ந்த பராசக்தி வெளிவந்தபோது அது தெய்வநிந்தனை செய்யும் ஒரு படைப்பாகவே பலராலும் பேசப்பட்டது. ஆனால் என்வரையில் அது ஒரு பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.
பக்தி இலக்கியம் என்பது புராண இலக்கியமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற பக்திநெறியை வெளிப்படுத்தும் வாழ்வியலை அடியொற்றியதாகவும் அது இருக்கலாம்.
பராசக்தியின் கதாநாயகன் நல்லவனாக அதே சமயம் தவறான மனிதர்களால் ஏமாற்றங்களுக்குள்ளாகிறவனாக இறுதியில் தவறானவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவனாகச் சித்தரிக்கப்படுகிறான். அதுவரையில் தன்னை ஒரு பைத்தியக்காரன் போலவே அவன் காட்டிக்கொள்கிறான். (பக்தி நெறி பரப்பிய சித்தர்களில் பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்குப் பைத்தியக்காரர்களாகவே காட்சியளித்தனர் என்பது நாம் கவனிக்கத் தக்கது.)
என்வரையில் கலைஞர் கருணாநிதி என்ற அற்புதமான இலக்கியவாதி படைத்த பக்தி இலக்கியம்தான் பராசக்தி.
(கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக - பராசக்தியின் நாயகன் குணசேகரன் சொல்லும் வார்த்தைகள் அவை.)
இந்த வரிசையில் திருவாரூர் தங்கராசு என்ற படைப்பாளியின் கருத்தோவியமாக வெளிவந்துஇ எம் ஆர்.ராதா என்கின்ற அற்புதமான கலைஞனை நினைவூட்டிக்கொண்டிருக்கிற இரத்தக் கண்ணீர் மற்றுமோர் பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.
அண்மையில் வெளியான நமது சமகாலக் கலைஞன் கமலகாசனின் “அன்பே சிவம்!” திரைப்படமும் ஒரு தனித்துவமான பக்தி இலக்கியமே.
Keine Kommentare:
Kommentar veröffentlichen