Mittwoch, 27. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...10





 















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.

-இந்துமகேஷ்


வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனால் வழங்கப்பட்ட வரம்.
எப்படி வாழ்வது என்பது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது. வாழ்க்கைக்கென்று சில கட்டுக் கோப்புக்களை மனிதசமுதாயம் வகுத்து வைத்திருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு வெளியேறுபவன் தீயவனாகவும் அதற்குள்ளேயே நின்று வாழ்க்கையை நடாத்துபவன் நல்லவனாகவும் காட்சிதருகிறார்கள்.

நல்லவன் கெட்டவன் என்ற பேதங்கள் அவரவர் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. நல்லவன் என்று புகழப்படுபவனிடத்தில் தீய குணங்கள் எதுவுமே இருந்திருக்காது என்றோ தீயவன் என்று ஒதுக்கப்படுகிறவனிடத்தே நல்ல குணங்கள் எதுவுமே இருக்காது என்றோ இது அர்த்தப்படாது. வாழ்ந்த, வாழும் சூழலைப் பொறுத்து இயல்பு நிலையிலிருந்து மாறுபடுவதென்பது இயற்கையாகவே நடந்துவிடுகிறது. அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குமுன் பலருடைய ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. அவர்கள் வாழும் காலத்தில் இந்த உலகத்தில் அவர்கள் விட்டுச் செல்லும் நன்மை தீமைகளே அவர்களின் வாழ்க்கையைச் சொல்கின்றன.
 
சமுதாயமாக மனிதன் வாழக் கற்றுக்கொண்டாலும் ஒவ்வொரு தனிமனிதனைப் பொறுத்தவரைக்கும் அவனே கதாநாயகன். அவனது துணையாக வருபவள் கதாநாயகி. ஏனைய உறவுகள் யாவும் துணைப் பாத்திரங்கள்தாம்.

அடுத்தவர் வாழ்க்கையில் துணைப் பாத்திரமாக இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களே.
 
(பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களைவிடவும் துணைப்பாத்திரங்களே மனதில் இடம்பிடித்துக்கொள்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. வாழ்க்கைப்படகு-முத்துராமன், நெஞ்சிருக்கும்வரை-

வி.கோபாலகிருஷ்ணன், உயர்ந்தமனிதன்;-அசோகன், கண்கண்டதெய்வம்-எஸ்வி.சுப்பையா, என்னதான்முடிவு-டி.எஸ்.பாலய்யா, தண்ணீர்தண்ணீர்-டெல்லிகணேஷ், அர்ச்சனைப்பூக்கள்- பூர்ணம் விஸ்வநாதன், சலங்கைஒலி-சரத்பாபு, ஒரு கை ஓசை-சங்கிலிமுருகன், தாமரைநெஞ்சம்-நாகேஷ், அபூர்வராகங்கள்-ரஜனிகாந்த், 
ஈ-பசுபதி, என நீண்ட பட்டியலில் அடக்கவேண்டிய இன்னும் ஏராளமான கலைஞர்களால் வெளிப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையுலகில்  நிலைத்து, இரசிகர்கள் மனதில் நீங்காமலும் இருக்கிறார்கள்.



கதாநாயகன் என்றதுமே அவன் ஏதோ ஒருவகையில் சிறப்புள்ளவனாகவும் நல்லவனாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.
திரைக்கதைகளில் வருகிற கதாநாயகர்கள் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வந்தார்கள்.


தானும் நன்மைகளைப் பரிந்து அதற்கு எதிராக இடையூறாக இருப்பவர்களையும் திருத்தி நல்லவர்களாக்கி அவர்களது வாழ்க்கையையும் செப்பனிட்டு நல்லதொரு சமுதாயம் மலரவேண்டும் என்று பாடுபடுகிற கதாநாயகர்களையே அதிகமாகக் கண்டிருந்த தமிழ்த்திரையுலகம் திடீரென அடிதடிக்கும் குத்துவெட்டுக்கும் தயாராக இருக்கின்ற கதாநாயகர்களை அண்மைக் காலங்களில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.

உலகம் எங்கும் வன்முறைகளையே சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் பேனா அதையே பதிவு செய்ய விழைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் அவர்கள் சமுதாய அக்கறையோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள்மீது வீசுகிறோம்.

வன்முறை வன்முறையைத்தான் பிரசவிக்கும் என்பதையே அவர்கள் காட்ட முனைந்தார்கள். திரைக்கதையின் முடிவையும் அவ்வாறே அமைத்தார்கள்.
(நாயகன், பம்பாய், ரோஜா, மகாநதி, விருமாண்டி, தலைநகரம், வெய்யில், தம்பி, போன்ற படங்கள்)


வன்முறையைக் கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டு அந்த வன்முறையாலே தம்மை இழந்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது (நிஜவாழ்வில்).

எத்தனையோ நூற்றுக்கணக்கான கதாநாயகர்களும், கதாநாயகிகளும் வன்முறைகளுக்குப் பலியானதும் பலியாகிக்கொண்டிருப்பதும் மனித வரலாற்றில் ஒரு தொடர்கதை.

மனித சமுதாயத்தை மாற்றியமைக்கப் புறப்பட்ட புனிதர்களில் பெரும்பாலானோர்கூட (யேசு, காந்தி, மார்ட்டின் லூதர்) இத்தகைய வன்முறைகளுக்குப் பலியாகிப் போனவர்களே எனும்போது சராசரி மனிதன் எம்மட்டு?

வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படங்களில்மட்டும் வன்முறை ஏன் என்று சீற்றம் கொள்வதென்பது சிரிப்புக்கிடமானது.
நிகழ்கால வாழ்வில் எதிர்ப்படும் நிஜங்களைச் சித்தரிக்காமல் வெறும் கற்பனைக் குதிரையோட்டிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளை வரவேற்க யாரும் தயாராக இல்லை.
திரைக்கதை அமைக்கும் படைப்பாளி இதனை நன்கறிவான். காலமாற்றத்துக்கேற்ப நிஜவாழ்வில் அவன் சந்திக்கும் பாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவரும்போது வன்முறையாளர்களான கதாபாத்திரங்கள் அதிகமாய் இடம்பிடித்துக்கொள்கிறார்கள்.

காட்சிப்படுத்தலில் சற்று மிகைப்படுத்தலும் சேர்ந்துவிடும்போது, இப்படியெல்லாமா நடக்கிறது? என்ற கேள்வி இரசிகர்கள் மனதில் தோன்றுகிறது. என்றாலும் வெவ்வேறு வகையான இரசனை உணர்வு உள்ளவர்கள் அதனை ஒரு குறையாகக் கொள்ளாமல் திரைப்படத்தின் ஏனைய பக்கங்களில் (கதையமைப்பு, பாடல்கள், காட்சிப்படுத்தல், நடிப்பு, ஒளியமைப்பு என்று) தங்கள் இரசனையைச் செலுத்துவதன் மூலம் இத்தகைய படங்களும் வரவேற்புப் பெறுகின்றன.

முன்னைய திரைப்படங்களில் உதாரணங்கள்மூலம் வன்முறை வெளிப்படுத்தப்பட்டது.
இரண்டு சமமான மனிதர்கள் மோதிக்கொள்ளும்போது, சிங்கமும் புலியும் மோதிக்கொள்ளும். கதாநாயகியை வில்லன் நெருங்கும்போது புள்ளிமானை சிங்கமோ அல்லது கோழிக்குஞ்சை பருந்தோ கவ்விக்கொள்ளும். சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களைவிட்டு மெதுவாக நழுவும் ஒளிப்படக் கருவி நடைபெறும் சம்பவத்துக்கு இணையான வேறொரு இயற்கைக் காட்சியைக் கோர்த்துக் கொள்ளும்.
இதெல்லாம் இப்போது தேவையில்லை.

வர்ணனை சார்ந்த இலக்கியங்களை சுவைப்பதிலிருந்து இரசனைகள் மாறுபட்டு யதார்த்தம் தேடியபோது எல்லாவற்றையும் நேரடியாகச் சித்தரிக்கப்படவேண்டிய கட்டாயத்துக்குள் படைப்பாளி தள்ளப்பட்டான். அதன் விளைவே திரைப்படங்களின் புதிய மாற்றத்துக்கும் காரணமாயிற்று.

வன்முறை, ஆபாசம் என மலினப்பட்டுப் போயிற்று திரைப்படம் என்று வருந்துதில் அர்த்தமில்லை. மாறாக நாம் வாழும் சமுதாயத்தில் மாற்றங்கள் வரும்போது திரைப்படங்களிலும் மாற்றம் தானாக வரும். இத்தகைய மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தக்க படங்களைத் தயாரிக்கும் ஆர்வமும் விருப்பமும் நமது திரைக்கலைஞர்களுக்கு நிறையவே இருக்கிறது என்பதை அவ்வப்போது அவர்கள் தரும் பேட்டிகளிலிருந்து நாம் காணமுடிகிறது.



Samstag, 23. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 9




















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்





உலகத்தரம் என்று ஒன்று.
இது எல்லோர்க்கும் பொது என்ற ஒன்றாக இல்லாமல் பிறநாட்டவன், பிறமொழிபேசுபவன், பிற கலாச்சாரப் பண்புகள் வாய்ந்தவன் என்று அடுத்தவனிலிருந்து நாம் எந்தளவு வித்தியாசப் படுகிறோம் என்பதைக் கணிப்பிடுகிற ஒன்றாக நோக்கப்படுகிறது.

அவனைப்போல் அல்லது அவனைவிட நான் எந்தளவு உயர்ந்தவன் என்று நோக்குகிற மனோபாவம் நமது முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நம்மை ஒருவித தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது.

நம்மிடமுள்ள தனித்துவத்தை அதன் சிறப்பை மறந்து அடுத்தவனைப் பார்த்து ஆதங்கப்பட ஆரம்பிக்கும்போதுதான் நமது முன்னேற்றமும் தடைப்பட்டுப் போகிறது. ஒருவித மனத்தளர்ச்சிக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். சாதனை புரியும் தகுதி நம்மிடம் இல்லையோ என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது. இவ்வளவுதான் நாம் என்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுற்றிவரத் தொடங்கிவிடுகிறோம்.

தமிழ்த்திரையுலகமும் இப்படியொரு தாழ்வுச் சிக்கலுக்குள அவ்வப்போது தள்ளப்பட்டுக்கொண்:டே வந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க முனைந்தவர்களும் பலவித  சோதனைகளைச் சந்தித்தாகவேண்டியிருந்தது.
வெளிநாட்டுக்காரனைப் பார் எத்தனை அற்புதமாகப் படம் எடுக்கிறான்... நாங்களும் எடுக்கிறோமே.. படமா இது? என்று சலித்துக்கொள்வதில் நாம் சலிப்புக்கொள்வதில்லை.

உலகளாவிய ரீதியில் வெளியாகும் திரைப்படங்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இதுவரை வெளியாகிவிட்டன.
இதில் எத்தனை திரைப்படங்கள் தரமானவை என்று விமர்சகர்கள் புளுகிக்கொண்டிருக்கிறார்கள்.? பிறமொழிப் படங்களைப் பார்த்து இரசிக்கும் இரசிகர்களின் கணிப்பின்படி எத்தனை படங்கள் தரமானவை என்று கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன? 
ஒரு நூறு? அல்லது இருநூறு?

வருடாந்தம் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துத் தரும் உலகத் திரைப்படத்துறை விரல்விட்டு எண்ணத்தக்க அளவுக்குத்தான் தரமானது என்று பேசப்படும் படங்களைத் தயாரிக்கிறது என்றால் உலகத் திரைப்படத் துறையில் ஒரு பகுதியான தமிழ்ப் படத்துறை எத்தனை படங்களைத் தரமுடியும்.?

தரமான பல படங்கள் வெளிவந்தும் அதைத் தரம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிற மனோபாவத்துக்கு உலகத்தரம் என்று பெயரிட்டு அவற்றை ஓரங்கட்டுவதில் நமக்கு நிகரானவர்கள் நாமே.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல், யார் என்னசொன்னாலும் தரமான படங்களைத் தயாரித்தே தீருவோம் என்று சளைக்காது பாடுபடும் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகில் நிறையவே இருக்கிறார்கள். சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்வகைப்பட்ட மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்களின்
ஆரம்பம் அவதாரபுருசர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டது. (இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், இன்னோரன்ன கதைகளிலும் இவற்றிலுள்ள கிளைக்கதைகளிலுமுள்ள கதை மாந்தர்கள்)

பிறகு மன்னர்களைக் கதைமாந்தர்களாக்கியது (அக்பர், அரிச்சந்திரா, அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், அரசிளங்குமரி, நாடோடி மன்னன், இராஜராஜசோழன் மன்னாதி மன்னன், ஆயிரத்தில் ஒருவன்போன்ற படங்கள்;) 

பிறகு மேல்தட்டு மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கியது. ( உயர்ந்த மனிதன், எங்க ஊர் ராஜா, பைலட் பிரேம்நாத், மோட்டார் சுந்தரம்பிள்ளை, அபூர்வ ராகங்கள் ) 

பின்னர் நடுத்தரக் குடும்பத்து மாந்தர்கள் ( கல்யாணப்பரிசு, ஆடிப்பெருக்கு, ஆலயமணி, அவள் ஒரு தொடர்கதை,) தொடர்ந்து அடித்தட்டு மக்கள் கதாபாத்திரங்களாயினர். (துலாபாரம், சுவரில்லாத சித்திரங்கள்)

திரையில் இலக்கியம் படைக்க விளைந்தவர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வந்தார்கள். (பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை,) 
அவர்களது படக்கருவிகளின் பார்வைக்குள் இயற்கை இலக்கியமாய்ப் படிந்தது. அந்த இயற்கையோடு இரண்டறக் கலந்த மனிதர்கள் கதாபாத்திரங்களாக தமிழ்த் திரைப்படங்களில் வாழ ஆரம்பித்தார்கள்.

முடிந்துபோன காலங்களை மறுபடி மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகத்தை உணர்ந்தவர்களாய் அதை இலக்கியமாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபாடுகாட்டியபோது உருவான சில படங்களின் வெற்றி தமிழ்த் திரையுலகில் புதியதொரு மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், சேரனின் -ஆட்டோகிராப், தவமாய்த் தவமிருந்து - தங்கர்பச்சானின் - அழகி, பள்ளிக்கூடம்) 

சிறந்த ஒரு நாவலைப் படித்த மனநிறைவை அண்மையில் எனக்குத் தந்த படம்- கல்லூரி.
நடிகர்களாகப் பரிச்சயம் கொள்ளாத முகங்களோடு அந்தக் கதையின் பாத்திரங்களாகவே இன்னும் மனதில் நிழலாடுகிற அந்தக் கதை மாந்தர்கள் ஒருபோதும் மறக்கவே முடியாதவர்களாய் என்னுள் நிலைத்துவிட்டார்கள்.
ஏழ்மைநிலவும் குடும்பங்களிலிருந்து கல்லூரிக் கனவுகளோடு வாழ்வைத்தொடரும் இளைஞர் யுவதிகளை அவர்தம் உணர்வுகளை யதார்த்தம் மாறாது கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது கல்லூரி. மிகைப்படுத்தப்படாது வெளிப்படுத்தப்படும் அந்தத் தோழமை உணர்வும், வெளிப்படுத்தப்படாமலே முற்றுப்பெறுகின்ற காதலும் இந்தக்கதையில் முக்கிய பங்கு எடுத்திருந்தபோதும், நடிக்கிறார்கள் என்ற உணர்வே தோன்றாமல் எல்லாப் பாத்திரங்களும் இயல்பான மாந்தர்களாய் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பு.



கையில் எடுத்ததும் வாசித்து முடித்துவிட்டுத்தான் வைக்கவேண்டும் என்று துடிப்பேற்படுத்துகிற ஓர் இலக்கியமாய், தொடக்கம் முதல் முடிவு வரை அந்தப் பாத்திரங்களோடு உறவாடிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது கல்லூரி.
பாலாஜி சக்திவேல் என்கிற அந்தப் புதிய எழுத்தாளனுக்கென்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனியிடத்தைத் தந்திருக்கிறது கல்லூரி.