ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.
-இந்துமகேஷ்
வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனால் வழங்கப்பட்ட வரம்.
எப்படி வாழ்வது என்பது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது. வாழ்க்கைக்கென்று சில கட்டுக் கோப்புக்களை மனிதசமுதாயம் வகுத்து வைத்திருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு வெளியேறுபவன் தீயவனாகவும் அதற்குள்ளேயே நின்று வாழ்க்கையை நடாத்துபவன் நல்லவனாகவும் காட்சிதருகிறார்கள்.
நல்லவன் கெட்டவன் என்ற பேதங்கள் அவரவர் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. நல்லவன் என்று புகழப்படுபவனிடத்தில் தீய குணங்கள் எதுவுமே இருந்திருக்காது என்றோ தீயவன் என்று ஒதுக்கப்படுகிறவனிடத்தே நல்ல குணங்கள் எதுவுமே இருக்காது என்றோ இது அர்த்தப்படாது. வாழ்ந்த, வாழும் சூழலைப் பொறுத்து இயல்பு நிலையிலிருந்து மாறுபடுவதென்பது இயற்கையாகவே நடந்துவிடுகிறது. அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குமுன் பலருடைய ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. அவர்கள் வாழும் காலத்தில் இந்த உலகத்தில் அவர்கள் விட்டுச் செல்லும் நன்மை தீமைகளே அவர்களின் வாழ்க்கையைச் சொல்கின்றன.
சமுதாயமாக மனிதன் வாழக் கற்றுக்கொண்டாலும் ஒவ்வொரு தனிமனிதனைப் பொறுத்தவரைக்கும் அவனே கதாநாயகன். அவனது துணையாக வருபவள் கதாநாயகி. ஏனைய உறவுகள் யாவும் துணைப் பாத்திரங்கள்தாம்.
அடுத்தவர் வாழ்க்கையில் துணைப் பாத்திரமாக இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களே.
(பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களைவிடவும் துணைப்பாத்திரங்களே மனதில் இடம்பிடித்துக்கொள்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. வாழ்க்கைப்படகு-முத்துராமன், நெஞ்சிருக்கும்வரை-
வி.கோபாலகிருஷ்ணன், உயர்ந்தமனிதன்;-அசோகன், கண்கண்டதெய்வம்-எஸ்வி.சுப்பையா, என்னதான்முடிவு-டி.எஸ்.பாலய்யா, தண்ணீர்தண்ணீர்-டெல்லிகணேஷ், அர்ச்சனைப்பூக்கள்- பூர்ணம் விஸ்வநாதன், சலங்கைஒலி-சரத்பாபு, ஒரு கை ஓசை-சங்கிலிமுருகன், தாமரைநெஞ்சம்-நாகேஷ், அபூர்வராகங்கள்-ரஜனிகாந்த்,
ஈ-பசுபதி, என நீண்ட பட்டியலில் அடக்கவேண்டிய இன்னும் ஏராளமான கலைஞர்களால் வெளிப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையுலகில் நிலைத்து, இரசிகர்கள் மனதில் நீங்காமலும் இருக்கிறார்கள்.
கதாநாயகன் என்றதுமே அவன் ஏதோ ஒருவகையில் சிறப்புள்ளவனாகவும் நல்லவனாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.
திரைக்கதைகளில் வருகிற கதாநாயகர்கள் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வந்தார்கள்.
தானும் நன்மைகளைப் பரிந்து அதற்கு எதிராக இடையூறாக இருப்பவர்களையும் திருத்தி நல்லவர்களாக்கி அவர்களது வாழ்க்கையையும் செப்பனிட்டு நல்லதொரு சமுதாயம் மலரவேண்டும் என்று பாடுபடுகிற கதாநாயகர்களையே அதிகமாகக் கண்டிருந்த தமிழ்த்திரையுலகம் திடீரென அடிதடிக்கும் குத்துவெட்டுக்கும் தயாராக இருக்கின்ற கதாநாயகர்களை அண்மைக் காலங்களில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.
உலகம் எங்கும் வன்முறைகளையே சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் பேனா அதையே பதிவு செய்ய விழைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் அவர்கள் சமுதாய அக்கறையோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள்மீது வீசுகிறோம்.
வன்முறை வன்முறையைத்தான் பிரசவிக்கும் என்பதையே அவர்கள் காட்ட முனைந்தார்கள். திரைக்கதையின் முடிவையும் அவ்வாறே அமைத்தார்கள்.
(நாயகன், பம்பாய், ரோஜா, மகாநதி, விருமாண்டி, தலைநகரம், வெய்யில், தம்பி, போன்ற படங்கள்)
வன்முறையைக் கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டு அந்த வன்முறையாலே தம்மை இழந்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது (நிஜவாழ்வில்).
எத்தனையோ நூற்றுக்கணக்கான கதாநாயகர்களும், கதாநாயகிகளும் வன்முறைகளுக்குப் பலியானதும் பலியாகிக்கொண்டிருப்பதும் மனித வரலாற்றில் ஒரு தொடர்கதை.
மனித சமுதாயத்தை மாற்றியமைக்கப் புறப்பட்ட புனிதர்களில் பெரும்பாலானோர்கூட (யேசு, காந்தி, மார்ட்டின் லூதர்) இத்தகைய வன்முறைகளுக்குப் பலியாகிப் போனவர்களே எனும்போது சராசரி மனிதன் எம்மட்டு?
வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படங்களில்மட்டும் வன்முறை ஏன் என்று சீற்றம் கொள்வதென்பது சிரிப்புக்கிடமானது.
நிகழ்கால வாழ்வில் எதிர்ப்படும் நிஜங்களைச் சித்தரிக்காமல் வெறும் கற்பனைக் குதிரையோட்டிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளை வரவேற்க யாரும் தயாராக இல்லை.
திரைக்கதை அமைக்கும் படைப்பாளி இதனை நன்கறிவான். காலமாற்றத்துக்கேற்ப நிஜவாழ்வில் அவன் சந்திக்கும் பாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவரும்போது வன்முறையாளர்களான கதாபாத்திரங்கள் அதிகமாய் இடம்பிடித்துக்கொள்கிறார்கள்.
காட்சிப்படுத்தலில் சற்று மிகைப்படுத்தலும் சேர்ந்துவிடும்போது, இப்படியெல்லாமா நடக்கிறது? என்ற கேள்வி இரசிகர்கள் மனதில் தோன்றுகிறது. என்றாலும் வெவ்வேறு வகையான இரசனை உணர்வு உள்ளவர்கள் அதனை ஒரு குறையாகக் கொள்ளாமல் திரைப்படத்தின் ஏனைய பக்கங்களில் (கதையமைப்பு, பாடல்கள், காட்சிப்படுத்தல், நடிப்பு, ஒளியமைப்பு என்று) தங்கள் இரசனையைச் செலுத்துவதன் மூலம் இத்தகைய படங்களும் வரவேற்புப் பெறுகின்றன.
முன்னைய திரைப்படங்களில் உதாரணங்கள்மூலம் வன்முறை வெளிப்படுத்தப்பட்டது.
இரண்டு சமமான மனிதர்கள் மோதிக்கொள்ளும்போது, சிங்கமும் புலியும் மோதிக்கொள்ளும். கதாநாயகியை வில்லன் நெருங்கும்போது புள்ளிமானை சிங்கமோ அல்லது கோழிக்குஞ்சை பருந்தோ கவ்விக்கொள்ளும். சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களைவிட்டு மெதுவாக நழுவும் ஒளிப்படக் கருவி நடைபெறும் சம்பவத்துக்கு இணையான வேறொரு இயற்கைக் காட்சியைக் கோர்த்துக் கொள்ளும்.
இதெல்லாம் இப்போது தேவையில்லை.
வர்ணனை சார்ந்த இலக்கியங்களை சுவைப்பதிலிருந்து இரசனைகள் மாறுபட்டு யதார்த்தம் தேடியபோது எல்லாவற்றையும் நேரடியாகச் சித்தரிக்கப்படவேண்டிய கட்டாயத்துக்குள் படைப்பாளி தள்ளப்பட்டான். அதன் விளைவே திரைப்படங்களின் புதிய மாற்றத்துக்கும் காரணமாயிற்று.
வன்முறை, ஆபாசம் என மலினப்பட்டுப் போயிற்று திரைப்படம் என்று வருந்துதில் அர்த்தமில்லை. மாறாக நாம் வாழும் சமுதாயத்தில் மாற்றங்கள் வரும்போது திரைப்படங்களிலும் மாற்றம் தானாக வரும். இத்தகைய மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தக்க படங்களைத் தயாரிக்கும் ஆர்வமும் விருப்பமும் நமது திரைக்கலைஞர்களுக்கு நிறையவே இருக்கிறது என்பதை அவ்வப்போது அவர்கள் தரும் பேட்டிகளிலிருந்து நாம் காணமுடிகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen