Donnerstag, 11. September 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 11





















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்




“ பிறக்கும்போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலையில்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே! ”
(கவிஞர் கண்ணதாசன்- கவலையில்லாத மனிதன்)


மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எங்கோ தொலைத்துவிட்டு எதிராளிகளைப் பார்ப்பதுபோல் நெருங்கிய உறவுகளையே முறைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் மனிதர்களின் தொகை இப்போது அதிகமாகிவிட்டிருக்கிறது.

வெறுப்பும் சலிப்பும்காட்டி மற்றவர்களது மனங்களையும் துன்பத்தில் தள்ளுவதையே நோக்கமாகக் கொண்டவர்களாய் மாறிவரும் சமுதாயத்தில் மகிழ்ச்சி எங்கிருந்து தோன்றும்?

அன்பு என்ற உணர்வே அற்றுப்போனவர்களாய் தாம் தம் நலன் என்று வாழ்பவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை மகிழ்ச்சி இல்லை அதனால் அவர்களது உதடுகளில் சிறு புன்னகைகூட அரும்புவதில்லை.

மருத்துவநிலையங்களில் கூட்டம் அதிகமாகிறது.
”உங்களுக்கு உடம்பில் ஒரு வியாதியும் இல்லை!” என்று கைவிரிக்கிறார் வைத்தியர்.
மருந்து தேடிப்போனவர் ஒப்புக் கொள்வதாயில்லை.
”நன்றாகப் பரிசோதனை செய்து பாருங்கள்!” என்று கெஞ்சுகிறார்.
”உங்களுக்கு மன அழுத்தம்தான்.. வேறொன்றுமில்லை. எப்போதும் சிரித்துச் சந்தோஷமாக இருக்கப் பழகிவிட்டீர்களானால் எல்லாம் சரியாகிவிடும்!?

தலைநிறையப் பிரச்சனைகளைச் சுமந்துகொண்டு அத்தோடு கூடவே உடல்நலமும் குன்றிப்போய் இருப்பவனைப் பார்த்து, “சிரித்துச் சந்தோஷமாக இரு!” என்றால் நடக்கிற காரியமா என்ன?

“எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. ஆனால் நான்மட்டும்..? எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்?” என்று சலித்துக் கொள்ளும் மனநோயாளியாக மாறிவிட்டவனிடம் சிரிப்பைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

வாழும் காலமும் சூழலும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது உண்மைதான். ஆனால் வருகின்ற வேதனைகளையும் சோதனைகளையும் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்றவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்வதுதானே ஒரு மனிதனின் கடமையாக இருக்கவேண்டும்.

எத்தனை துயரங்களுக்கிடையிலும் உதடுகள் இழந்துவிடாத புன்னகையோடு உலாவரும் மனிதர்கள் மற்றவர்களிடத்தே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வரவழைக்கிறார்கள்.
ஒருபோதும் அவர்கள் தமது துயரங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
“உங்களுக்கு என்னப்பா குறை எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்!” என்று மற்றவர்கள் அவர்களைப் பார்த்து வியப்பார்கள்.
சிரிப்பு ஒன்றே அவர்களிடமுள்ள பெரிய சொத்து.
இந்த உலகம் இன்னும் அழகாகத் தெரிகிறது என்றால் அதற்குக்காரணம் அவர்களது மலர்ந்த முகங்கள்தாம்.

சிரிப்பதைவிட சிரிப்பூட்டுவது என்பது மிகக் கஷ்டமான காரியம்.
அதனை இலகுவாக்கியவர்கள் நகைச்சுவை நடிகர்கள். 
பொழுதுபோக்குக்காகவும், மனஅமைதிக்காகவும் என்று திரையரங்குகளை நிறைக்கும் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு அவ்வப்போது சில நல்ல கருத்துக்களை விதைப்பதிலும் திரைக்கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் முக்கியத்துவம் பெறுவதுண்டு.

பெரும்பாலான நகைச்சுவைப் பாத்திரங்கள் தம்மை வருத்தியே மற்றவர்களைச் சிரிக்கவைப்பதுண்டு. 

தமிழ்த்திரைப்படங்களின் முதன்மை நகைச்சுவையாளரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தாமே பலவிதமாகச் சிரித்து மற்றவர்களைச் சிரிக்கவைத்தார் ஒரு திரைப்படப்பாடல்மூலம்.

“ சிரிப்பு! 
அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் 
பார்ப்பதே நமது பொறுப்பு.
மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் 
காட்டும் கண்ணாடிச் சிரிப்பு -இது 
களையைநீக்கி கவலையைப் போக்கி 
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு. 
துன்பவாழ்விலும் இன்பம் காணும் 
விந்தைதருவது சிரிப்பு -அதைத் 
துணையாய்க்கொள்ளும் மக்களின் மனத்தில் 
துலங்கிடும் தனிச் செழிப்பு!



-பாடலைப் பாடிக்கொண்டே விதவிதமான மனிதர்களைப்போல் அவர் சிரித்துக்காட்டும்போது எந்த உம்மணா மூஞ்சியும் வாய்விட்டுச் சிரித்துவிடும்.
நகைச்சுவை உணர்வோடு நல்ல கருத்துக்களை இலகுவாக மனங்களில் புகுத்த முடியும் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டதால் அவர் நகைச்சுவைவேடங்களையே அதிகம் தாங்கினார்.





இரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவின் பாத்திரப்படைப்பு நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்டிருந்தது. அளவுகடந்த வேதனையின்போது வெளிப்படும் வார்த்தைகளிலும் நகைச்சுவை உணர்வைக் கலந்திருப்பார் அவர். பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாக வந்தபோதும் அந்தப் பாத்திரங்களும் நகைச்சுவையைப் பிரதிபலிக்கத் தவறவில்லை.

ஒரு திரைப்படத்தின் கதாநாயகனைப்போல் நகைச்சுவை நடிகரும்
அந்தத் திரைப்படத்தின் இரண்டாவது கதாநாயகனுக்குரிய தகுதியைப் பெற்றிருப்பார்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஸ்.பாலையா, சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், தங்கவேலு, நாகேஷ், வெண்ணிற ஆடைமூர்த்தி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், தயிர்வடை தேசிகன், வீரப்பன், ஓமக்குச்சி நரசிம்மன், சோ, எஸ்வி.சேகர், கவுண்டணி, செந்தில், குமரிமுத்து, மணிவண்ணன், வடிவேலு, விவேக், தாமு, மயில்சாமி, மதன்பாப், வையாபுரி, கஞ்சா கருப்பு, என்று தொடரும் வரிசையில் எண்ணற்ற துணை நகைச்சுவை நடிகர்களும் இணைந்து தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையை நிறைத்து வைத்திருக்கிறார்கள்.






சிவாஜி,எம்.ஜிஆர்.,ஜெமினி, முத்துராமன், ரஜனி, கமல், சத்யராஜ், பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், ஜெயராம் என்று முக்கியமான கதாநாயகர்களும் அவ்வப்போது நகைச்சுவையை வழங்கத் தவறவில்லை.

பாடல்கள் சண்டைக் காட்சிகள்போல் தமிழ்த் திரைப்படங்களில் நீங்காமல் இடம்பெறுவன நகைச்சுவைக் காட்சிகள். பல படங்களில் சோகமான திரைக்கதையை அதன் மாற்றுவடிவமாக ஒரு கிளைக் கதையை நகைச்சுவையாக மாற்றி அமைத்து படத்தில் இணைத்திருப்பதை அவதானிக்கலாம்.

அடுத்தவீட்டுப்பெண், காதலிக்க நேரமில்லை அறிவாளி, கலாட்டா கல்யாணம், பாமாவிஜயம் அனுபவி ராஜா அனுபவி, மணல்கயிறு, ஆண்பாவம், இம்சை அரசன் 23ம்புலிகேசி, மும்பை எக்ஸ்பிரஸ்,; தெனாலி, பஞ்சதந்திரம், முற்றுமுழுதான நகைச்சுவைப்படங்களாக வெளியானவை.
இவற்றில் காதலிக்கநேரமில்லை இன்றுவரை சிறந்த நகைச்சுவைப் படமாகப் பேசப்படுகிறது.

கல்யாணப்பரிசு தங்கவேலு, திருவிளையாடல் நாகேஷ், மணல்கயிறு எஸ்விசேகர், தெனாலி கமல் தமிழ்த்திரை இரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத பாத்திரங்கள்.






நகைச்சுவைப் பாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் கோபு, வீரப்பன், சோ, எஸ்வி.சேகர், கிறேசிமோகன், பாக்கியராஜ், விசு ஆகியோர் என்றும் மறக்கமுடியாத சிரிப்பூட்டும் பாத்திரங்களை தமிழ்த்திரைக்குத் தந்திருக்கிறார்கள். ஏனைய எழுத்தாளர்களைவிட நகைச்சுவை எழுத்தாளர்கள் தனித்திறமை வாய்ந்தவர்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது.
சமுதாய நலனோடு அதேசமயம் சகமனிதர்களைப் புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வைப் பிரதிபிக்கும் ஆற்றல் கொண்டவர்களால்மட்டுமே நகைச்சுவை எழுத்தாளர்களாகப் பரிமளிக்க முடியும்.

தமிழ்த்திரையுலகம் அத்தகைய திறமைசாலிகளைப் பெற்றிருக்கிறது என்று நாம் தயங்காமல் ஒத்துக்கொள்ளலாம்.







    






Keine Kommentare:

Kommentar veröffentlichen