Donnerstag, 25. September 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி..12





ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்.






இலக்கியத்தில் பெண்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வகைப்பட்ட விமர்சனங்கள் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. பெண்நிலைபற்றிய கருத்துக்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. தமிழ்ச் சமுதாயத்துக்குள் பெண் எப்போதும் உயர்நிலையிலேயே இருக்கிறாள் என்பது உண்மையேயாயினும் ஒருசில விதிவிலக்குகளை உதாரணம் காட்டி பெண்ணடிமைத்தனம் பற்றி அடிக்கடி விவாதங்கள் புரிவது வேடிக்கையானது.

தாய்சொல்லைத் தட்டாதே என்று தாயான பெண்ணைத் தலைவணங்கி வளரும் ஆண்மகன் தாய்க்குப்பின் தாரம் என்றும் மனைவிசொல்லே மந்திரம் என்றும் வாழக் கற்றுக்கொள்கிறான். அன்பின் வசப்பட்ட வாழ்வில் பெண்ணுக்குள் ஆணும், ஆணுக்குள் பெண்ணும் அடங்கிப் போவதென்பது இயற்கையானது.

ஒருவனுக்கு மகளாகவும் ஒருவனுக்கு சகோதரியாகவும் ஒருவனுக்கு மனைவியாகவும் ஒருவனுக்கு தாயாகவும் என்று ஆண்களோடு பின்னிப்பிணைந்த பெண்ணின் வாழ்வுக்கு பாதுகாப்புத் தரவேண்டியது தன் கடமை என்று ஆண் நினைக்கிறானேயன்றி அது அவளை அடிமைகொள்ள முயல்வதாக ஆகாது.

குடும்பவாழ்க்கை என்பது கட்டுக்கோப்பாக இருந்தால்மட்டுமே ஒரு சமுதாயம் சிறந்த சமுதாயமாக அமையமுடியும். ஆணோ பெண்ணோ தான் தன்சுகம் என்று வாழப் பழகிவிட்டால் குடும்பவாழ்க்கை சீர்குலைந்து போகிறது. உறவுகள் தொலைந்துபோகின்றன. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாகிறார்கள்.

நாம் அன்புசெலுத்தாமல் மற்றவர்களிடமிருந்து அன்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. அன்பு செலுத்தத் தெரிந்த ஒரு பெண்ணால்மட்டுமே தன் குடும்பத்தை ஓர் ஆலயமாக மாற்ற முடியும். கணவனுக்காக பிள்ளைகளுக்காக என்று வாழும் பெண்கள் ஒரு சிலரது பார்வைக்கு கட்டுப்பெட்டித்தனமாகத் தோன்றினாலும் உண்மையில் அவள் தன் அன்பினால் அவர்களை ஆட்சி செய்கிறாள் என்பதே உண்மை. வெளிப்படையாக குடும்பத் தலைவனே அந்தக் குடும்பத்தை நிர்வகிப்பதுபோலத் தோன்றினாலும் ஆட்சிபுரிபவள் அந்தத் தலைவியே.

இலக்கியத்துப் பெண்கள்போல் சமகாலத்திலும் நாம் ஏராளமான பெண்களைக் காண்கிறோம். நிகழ்காலத்துக்கேற்ப வாழ்க்கைமுறைகளில் மாற்றங்கள் வந்தாலும் நமது சமூகத்துக்குரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பனவற்றைப் பக்குவமாகப் பயன்படுத்தி வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் நமது பெண்கள்.

பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் பெண்களின் பெருமை பேசுவனவாகவே இருக்கின்றன. என்பதை நாம் கவனிக்கலாம். கதாசிரியர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால் பெண்ணை வெறும் கவர்ச்சிக்குரியவளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் என்றும், அவர்களது பிரச்சினைகள் பேசப்படுவதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழவே செய்கின்றன.

பெண்மனம் சார்ந்த விடயங்கள் குறித்து கதைகள் எழுதப்படும்போது தாய்மையும் பரிவும் தியாகமும் அதில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காணலாம்.

“... நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் 
ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் 
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே 
மேதினியில் நாம் வாழச் செய்திடுவாள்!... ”
என்று தாயின் தியாகம்பற்றிச் சொல்வான் ஒரு திரைக்கவிஞன்.

தனது கடமைகள் இன்னதென்று இயல்பாக அவள் உணர்ந்தபடியே அவள் காரியமாற்றுகிறாள் இதைத்தான் நீ செய்யவேண்டும் என்று யாரும் அவளை நிர்ப்பந்திப்பதில்லை.

பெண் பிறக்கும்போதே தாய்மையின் இயல்போடேதான் பிறக்கிறாள். 
அறிவு தெளிய ஆரம்பித்ததுமே அவளது கைகளில் பொம்மைக் குழந்தைகள் வந்தமர்ந்து விடுகின்றன. பொம்மைக் குழந்தைகளை அழகுபடுத்தவும் அவற்றோடு கதைபேசவும் தாலாட்டவும் அவள் பெரிதும் விருப்பப்படுகிறாள். தானும் அழகாக வளர்ந்து, சூழலையும் அழகுபடுத்தி, தன்னைச் சார்ந்த சகமனிதர்களும் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அவள் கொள்ளும் விருப்பம் அவளது வாழ்வை மட்டுமல்ல அவள்சார்ந்த மற்றவர்களது வாழ்க்கையையும் வளமானதாக்குகிறது.

இதற்கு மாறாக சுயநலமும், தான் எனும் கர்வமும், அன்புசெலுத்துவதை அடிமைத்தனம் என்று கருதுபவளாகவும் அவள் இருந்துவிட்டால் அவளது வாழ்வோடு அவளைச்சார்ந்த மனிதர்களது வாழ்வும் அர்த்தமற்றுப்போகிறது.

ஒரு பெண்ணின் நிலையிலிருந்து தான் உணர்ந்ததையும் கற்றுக் கொண்டதையுமே ஒரு கதாசிரியன் கதையாகத் தருகிறான். அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் நடிகையான பெண்ணும் அந்தப் பாத்திரமாகவே மாறி திரைக்கதையை நிஜமென்று மாற்றிக்காட்ட முயல்கிறாள்.

தமிழ்த்திரையுலகில் முத்திரைபதித்த எண்ணற்ற நடிகையர்கள் மத்தியில் தாம் பங்கேற்ற பாத்திரங்கள் மூலம் என்றும் நிலைத்திருக்கின்ற நடிகையர்கள் வரிசையில், அன்னை -பானுமதி, நானும் ஒருபெண்- விஜயகுமாரி, துலாபாரம்- சாரதா, குலவிளக்கு- சரோஜாதேவி, நீலவானம்- தேவிகா, கைகொடுத்த தெய்வம்- சாவித்திரி, அவளுக்கென்றொரு மனம்- பாரதி, எங்கிருந்தோ வந்தாள்- ஜெயலலிதா, அவள் ஒரு தொடர்கதை- சுஜாதா, சிறை- லட்சுமி, மூன்றாம்பிறை- ஸ்ரீதேவி, நிழல் நிஜமாகிறது- ஷோபா, மொழி- ஜோதிகா, எனத் தொடரும் கதாநாயகிகளும், முக்கிய துணைப் பெண்பாத்திரங்களாக அவ்வப்போது வந்தாலும் நினைவிலே நிற்கிற மண்வாசனை காந்திமதி, முதல்மரியாதை வடிவுக்கரசி, இவர்களோடு, ஏராளமான வித்தியாசமான பெண்களை திரைமுகமாய்க் காட்டியுள்ள ஆச்சி மனோரமா என்று திரையில் வாழும் அத்தனை பாத்திரங்களும் காலம் கடந்தும் வாழத்தக்கவர்கள்.

தமிழ்த்திரையின் ஆரம்பகாலக் கதாநாயகிகள் பலரும் பின்னர்; தாயின் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டு அந்தப் பாத்திரங்களுக்குச் சிறப்பைத் தந்தார்கள்.
அம்மாக்களாக தமிழ்த்திரையில் வலம்வந்த கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, எஸ்.என்.லட்சுமி, பண்டரிபாய், வரிசையில் லட்சுமி, ராதிகா, ரேவதி, சுஜாதா, சரிதா, என்று தொடர்ந்து இப்போது சரண்யா மிகச் சிறந்த அம்மாவாக உலாத்திக்கொண்டிருக்கிறார். 

(நடிகர் நடிகைகள் வயதாகி மறைந்துபோனாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட தரமான பாத்திரங்கள் அழியாத காவியங்களாக என்றும் நிரந்தரமாக உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் )

பெண்ணை முக்கிய பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட பெரும்பாலான திரைக்கதைகள் குடும்பக் கதைகளாகவே இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
குடும்பப் பாங்கான வேடங்களைத் தாங்கிய நடிகைகள் பலர் இரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அவர்கள் ஏற்ற பாத்திரங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமே.

“குடும்பக் கதைகளா? என்ன குடும்பக் கதைகள்...? வெறும் காதல், தோல்வி, கண்ணீர் என்று சுற்றிச்சுற்றி அரைத்த மாவையே அரைக்கிற கதைகள்..! இவ்வளவும்தான் பெண்ணின் பிரச்சனைகள் என்பதுபோல் சித்தரிக்கின்ற கதைகள்..! உண்மையில் இவைதானா பெண்ணின் பிரச்சினைகள்.. இதற்குமேல் எதுவுமில்லையா..?” என்ற ஒருகேள்வி இந்தப் படங்கள் குறித்துக் கேட்கப்படலாம்.
ஆம். அது அப்படித்தான்.
ஒரு பெண்ணுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளும் இந்த மூன்றுக்குள்ளேயே அடக்கம். காதல் என்பது அவளது பருவத்தோடொட்டிய விடயமாகவும், தோல்வி என்பது அவளது நினைப்புக்களுக்கும் இலட்சியத்திற்குமான பெறுபேறாகவும், கண்ணீர் என்பதே அவளுக்குக் கிடைக்கும் பரிசாகவும் கருதமுடிந்தால் இந்த மூன்றுக்குள்ளேயே அவளது பிரச்சினைகளும் அடங்கிவிட்டதாய்க் கொள்ளலாம். அவளது பிரச்சனைகளிலிருந்து அவள் மீண்டெழுவதற்கான தீர்வினை ஒரு கதை கொண்டிருந்தால் அது சிறந்த கதையாகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி வெளியான பல திரைப்படங்கள் காலம்கடந்தும் பேசப்படுவனவாக இருக்கின்றன. அத்தகைய கதைகளைத் தந்த கதாசிரியர்களும் அந்தக் கதாபாத்திரங்களுடன் காலம்கடந்தும் வாழ்வார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு, கே.பாக்கியராஜ் ஆகியோர் பெண்களின் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்த கதாசிரியர்கள். 




கன்னத்தில் முத்தமிட்டால் மூலம் மணிரத்தினமும், அழகி படத்தின் மூலம் தங்கர்பச்சானும் பெண்களின் மன உணர்வுகளைப் படம்பிடித்திருக்கிறார்கள்.
  


Keine Kommentare:

Kommentar veröffentlichen