Montag, 27. Oktober 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி.. 13





















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புகள்

-இந்துமகேஷ்




உறவுதரும் மகிழ்வும் பிரிவுதரும் துயரும் கணப்பொழுதுக்குள் தோன்றிமறையும் உணர்வுகள்தாம். ஆனால் அவை நினைவுகளாய் மனதில் பதிந்து நீண்டகாலத்துக்கான உணர்வுகளாய் நம்முள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

சிறுசிறு சம்பவங்களின் கூட்டுத்தொகுப்பாய் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் நம்மால் மேற்கொள்ளப்படும் காரியங்கள், அவற்றின் பிரதிபலிப்பாய் இன்பத்தையோ துன்பத்தையோ நமக்குத் தந்துசெல்கின்றன.

நாம் பெறும் இன்பதுன்பங்களுக்குக் காரணமானது நமது செயல்கள்தாம் எனினும் அது இன்பத்தைத் தருகிறதா அல்லது துன்பத்தைத் தருகிறதா என்பதைத் தீர்மானிப்பது நமது மனோநிலையைப் பொறுத்தது.

ஒருவருக்கு இன்பமாகத் தோற்றமளிப்பது இன்னொருவருக்குத் துன்பமாகத் தோன்றுவதும், ஒருவருக்குத் துன்பம் தருவதாகத் தோற்றமளிப்பது இன்னொருவருக்கு இன்பமளிப்பதாகத் தெரிவதும் அவரவரது மனோநிலையைப் பொறுத்து அமைவதே.
 
இந்த உலகம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை உலகவாழ்க்கை என்பது மனித சமுதாயத்தைப் பொறுத்தவரை ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது. வாழ்கின்ற மனிதர்கள் காலத்துக்குக் காலம் வித்தியாசப் படுகிறார்களே தவிர வாழ்க்கை என்பது என்பது ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது.

இரவும் பகலும் எப்படி ஒன்றோடொன்று இணைந்திருக்கிறNதூ அதுபோலவே இன்பதுன்பமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.
நன்மை தீமைகளும் அவ்வாறே.

தீமைகளைக் களைந்து தான்வாழும் சமுதாயத்தைச் சீர்படுத்தமுயல்வதாய்த் துணியும் மனிதனும் பல சந்தர்ப்பங்களில் அந்தத் தீமைக்கே பலியாகிப் போவதென்பதும் இந்த உலகத்தில் தொடர்கதையாகி விட்டிருக்கிறது.

நல்லவர்கள் வாழ்க்கைமுழுதும் துயரத்திலேயே உழல்வதும் பொல்லாதவர்கள் தமது அட்டூழியங்களாலும் அடாவடித்தனங்களாலும் சமுதாயத்தை அடக்கியாண்டுகொண்டு இன்பமாக வாழ்வதும் கண்ணெதிரே விரிகின்ற காட்சிகளாகிவிட்டன.
உயர்வு தாழ்வு கற்பித்து உலகவாழ்க்கையை நரகமாக மாற்றியமைத்துவிட்ட மனிதர்கள் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்துகொண்டு உல்லாசவாழ்க்கை வாழ்வது, நலிந்தவர்கள் மனங்களிலும் ஒருவித நப்பாசையை வளர்த்துவிடுகிறது. நாமும் அவர்களைப்போல்  மாறிவிட்டால் நமக்கும் விடிவு பிறக்குமே என்ற நப்பாசையில் அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அவர்களை அழிவுப் பாதைக்கே இழுத்துச் செல்கிறது. அதற்கான தண்டனையும் அளவுக்கதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கிறது. வாழும்வகை புரியாமல் அவர்கள் விழிபிதுங்கித் தடுமாறுகிறார்கள். 

திரைக்கதைகளில் அதிகமான இடங்களை கதாநாயகன் கதாநாயகி ஆக்கிரமித்தாலும் அதேயளவு முக்கியத்துவத்தை வில்லன் எனப்படும் எதிராளியும் பெற்றுவிடுகிறான். பலசமயங்களில் கதாநாயகனையும்விட அதிகளவு முக்கியத்துவத்தை வில்லன்கள் பெற்றுவிடுவதும்  நிகழ்கிறது.

ஒருமுறை எனது நண்பர் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்:
“ஒரு படத்திலுள்ள கதாநாயகனாக அல்லது வில்லனாக வாழும் சந்தர்ப்பம் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ எதைத் தெரிவுசெய்வாய் என்று என்னைக் கேட்டால் எனது தெரிவு வில்லன்தான். ஏன் தெரியுமா? ஒரு மூன்றுமணித்தியாலப் படத்தில் வில்லன் இரண்டு மணிநேரம் சந்தோஷமாக இருந்துவிட்டு இறுதியில் சாகிறான். கதாநாயகனோ வில்லனுடன் மல்லுக்கட்டவும், கதாயநாயகிக்காய் கண்ணீர்வடிக்கவும,; குடும்பத்துக்காக நண்பர்களுக்காக பாடுபடவும் என்று இரண்டரை மணிநேரமாகப் படாத கஷ்டமெல்லாம் பட்டு கடைசியில்  சுபம் என்று காட்டும்போதுதான் சிரிக்கிறான். ஆக அதிக நேரம் அல்லல்படுகிற கதாநாயகனைவிட இருக்கிற நேரத்தில் அதிகநேரம் சந்தோஷமாக இருந்துவிட்டுச் சாகிற வில்லனாக இருப்பது நல்லதல்லவா!?”

- ஒருசிலர் இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.
ஆனால் பார்வைக்கு வில்லனாகத் தெரிபவர்கள் எல்லோருமே உண்மையில் வில்லன்கள் அல்ல என்பதும் அவர்கள் தம்மை வில்லனாகக் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்  என்பதும்  அவர்களோடு நெருங்கிப் பழகுபவர்களுக்குத் தெரியும். திரைப்படங்களில் வில்லன்களாகப் பெயரெடுத்தவர்களுக்கும் இது பொருந்தும்.

நிஜவாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்வது கஷ்டமாகவும், கணப்பொழுதில் தீயவர்கள் என்று பெயெரடுப்பது சுலபமாகவும் இருக்கிறது. ஆனால் நடிப்பு என்று வரும்போது நல்லவனாக நடிப்பது சுலபமாகவும் தீயவனாக நடிப்பது கஷ்டமாகவும் உணரப்படுகிறது.
 
ஒரு சமுதாயத்தில் தீமைகளை வளர்த்துவிடும் விடயங்களைத் தமது முகபாவத்தில் வெளிப்படுத்துவதோடு இரசிகர்கள்மனதில் அந்தக் கதாபாத்திரத்தின்மீது ஒருவித வெறுப்பையும் உருவாக்கவேண்டிய பொறுப்பு வில்லன் கதாபாத்திரம் ஏற்கும் நடிகனுக்கு அவசியமானதாகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு நாம் அந்த வில்லன்மீது வெறுப்புக்கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தீமைகளின்மீதும் நாம் வெறுப்புக்கொள்ளும் மனோநிலை வளரும்.

வில்லன்களை கதாநாயகன் அடித்துவீழ்த்தும்போது எழுகின்ற ஆரவாரம் அந்த வில்லனின் தீய நடவடிக்கைகளுக்கு வீழ்கின்ற அடிகளாக இரசிகர்கள் உணர்வதால் எழுகின்ற மகிழ்ச்சி ஆரவாரமே. 

தமிழ்த்திரைப்படங்களின் பெரும்பாலான கதாயகர்களும் பலவிதமான வில்லன் பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார்கள். தீமைகளால் விளையும் அனர்த்தங்களை அந்தப் பாத்திரங்கள்மூலம் வெளிப்படுத்தியதோடு தமது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முன்னணிக் கதாநாயகர்கள் என்று புகழப்படுகிற சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், இவர்களோடு முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், என்று தொடர்ந்து ரஜனி காந்த், கமலகாசன், சிவகுமார், விஜயகுமார், சரத்குமார், சத்யராஜ், என்று பெரும்பாலான கதாநாயகர்கள் வில்லன்களாகப் பரிணமித்திருக்கிறார்கள். 

ஆனால் தமிழ்த் திரையுலகில் அதிக காலம் நிரந்தர வில்லன்களாகப் பவனிவந்தவர்கள் என்று தனியாக ஓர் நீண்ட பட்டியலே உண்டு. டி.எஸ்.பாலையா, எஸ்வி.ரங்கராவ், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ராமதாஸ், அசோகன், இவர்களோடு வி.எஸ்.ராகவன், தேங்காய் சீனிவான், செந்தாமரை, மலேசியா வாசுதேவன், விஸ்வம், மணிவண்ணன், ஆனந்தராஜ், சரண்ராஜ், ரகுவரன் என்று தொடரும் வில்லன்கள் பட்டியல்.  

வில்லன்களும் பலரகம்.
குடும்பவில்லன்கள், சமுதாய வில்லன்கள், உலகமகா வில்லன்கள் என்று கதைகளுக்கேற்ப இவர்களும் உருப்பெறுவார்கள்:
குடும்பங்களைக் குலைத்து நாசம் பண்ணுவது குடும்ப வில்லன்களின்  வேலையாகவும், சமுதாயச் சீர்கேடுகளை வளர்த்து ஊரைப் பிளவுபடுத்துவது சமுதாய வில்லன்களின் வேலையாகவும், உலகத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிடத் திட்டம் தீட்டுவது உலகமகா வில்லன்களின் வேலையாகவும் இருக்கும்.

இவர்களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றப் போராடும் கதாநாயகர்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் திரைக்கதைகள் சமுதாயத்தை சீர்படுத்த ஓரளவுக்கேனும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்!” என்ற வள்ளுவன் வழியே பழைய கதாநாயகர்கள் தீமையை ஒழிக்க நன்மையைப் பயன்படுத்தியதாகக் கதைகள் அமைந்தன. இப்போதோ தீமையைக் கருவறுக்க வன்முறையே வழி என்பதாக உலகம் ஆயுதத்தைக் கையிலெடுத்தபின் உருவாகும் கதைகள் கதாநாயகர்களின் கைகளிலும் ஆயதங்களைக் கொடுத்ததால் வில்லன்கள் அவசியப்படவில்லை. (கடவுள்பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவை நான் என்று கதாநாயகனே வில்லனும் ஆகிவிட்டான்.)

வாழ்க்கை நெறியைக் கற்றுத்தருவதில் இலக்கியத்தின் பங்கு மகத்தானது. ஆனால் அதன் அருமையை உணர்வதற்கேற்ப மனிதர்கள் தொகை இருந்ததில்லை என்பதும் இருக்கவில்லை என்பதும் கசப்பானதொரு உண்மை.

எழுத்துவடிவம் பெறுமுன் கர்ணபரம்பரைக் கதைகள் என்று சொல்லப்படும் செவிவழிக் கதைகள் மூலமாக உலாவந்த இலக்கியங்கள் ஒவ்வொரு சமுதாயத்திலும் அதிக இடம் பிடித்திருந்தன. எழுத்தாளர்களுக்குப் பதிலாக கதைசொல்லிகள் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டார்கள்.

வாசிப்பு வாசனையற்ற மனிதர்களிடத்தேயும் இலக்கியங்களைக் கொண்டுவந்துசேர்க்கும் பெருமைக்குரியவை திரைப்படங்கள் எனில் அது மிகையல்ல.   


Keine Kommentare:

Kommentar veröffentlichen