திரைக்கடலோடி இலக்கியம் தேடி...
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக்குறிப்புக்கள்)
-இந்துமகேஷ்
4.
ஒரு மாலைப்பொழுது.
கடற்கரையோரமாக இரண்டு நண்பர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
வானத்தில் சில பறவைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன.
அவை பறந்துசெல்லும் அழகை இரசித்தபடி நண்பர்களில் ஒருவன் சொன்னான்:
“அந்தப் பறவைகளைப் பார்த்தாயா? அவை எத்தனை அழகாக மகிழ்ச்சியாகப் பறந்துகொண்டிருக்கின்றன!”
மற்றவன் இவனைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான்:
“அவை அழகாகப் பறந்துகொண்டிருக்கின்றன என்பது சரிதான். ஆனால் அவை மகிழ்ச்சியாகத்தான் பறந்துகொண்டிருக்கின்றன என்று நீ எப்படிச் சொல்ல முடியும். நீயும் ஒரு பறவை அல்லவே!”
நண்பனின் கேலிக்குப் பதிலாக முன்னவன் சொன்னான்:
“அவை மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது என்று நீ எப்படிச் சொல்லமுடியும்? நீ நான் அல்லவே!”
ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. முரண்பாடுகள் உருவாகின்றன. சில சமயங்களில் அர்த்தத்தோடும் பல சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாமலும் முரண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன.
பார்ப்பவர் மனோநிலைக்கேற்ப காட்சிகள் மாற்றம் பெறுகின்றனவே தவிர காட்சிகள் இயல்பாகவே உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதும் கற்றுக்கொள்கிறோம் என்பதும் நமது மனோபாவத்தைப் பொறுத்ததே.
வாழ்க்கையிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோமோ இதற்கான முயற்சிகளையே முன்னெடுக்கிறோம். முயற்சியினாலேயெ அதைப் பெற்றுக்கொள்கிறோம்.
பகுத்தறிவின் எல்லையில் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனைக் காணமுடியாத மனிதன் தன்மீது தனக்குள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையோடு நாத்திகவாதம் பேசுவது இயல்பானதுதான் என்றாலும் வாழ்வின் எல்லையை அவன் தொட்டுவிடுவதற்குள் ஆன்மிகத்தின் சில பக்கங்களையாவது அவன் புரட்டிப் பார்க்கவும் நேர்ந்துவிடுகிறது.
இதையும் அவன் பேசும் நாத்திக வாதத்துக்குள் நின்றே செய்கிறான்.
பக்தி இலக்கியம் குறித்ததான திரைப்படப் பார்வையினூடு பகுத்தறிவுப் போதனைகள் நிறைந்ததாகச் சித்தரிக்கப்பட்ட அல்லது விமர்சிக்கப்பட்ட சில படங்களைப் பார்க்கும்போது இந்த உண்மை புரியும்.
அன்பே சிவம் என்று ஒரு திரைப்படம்.
பத்மஸ்ரீ கமலகாசனின் பல படங்கள் இலக்கியத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.
அவற்றில் அன்பே சிவமும் ஒன்று. கதை திரைக்கதை இரண்டையும் கமலகாசனே எழுதியிருக்கிறார். வசனங்களை எழுத்தாளர் மதன் எழுதியிருக்கிறார்.
என்வரையில் கமலகாசனை ஒரு நடிகராகமட்டும் பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கிறேன்.
அன்பே சிவம் எனும் மிக ஆழமான ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் தயாரித்திருக்கும் திரைப்படம் அன்பே சிவம்.
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
(கமலகாசனின் குரலில் வெளிப்படும் பாடல்)
இந்தத் திரைக்கதையின் முடிவில் வரும்காட்சியில்-
சிவத்தை(கமலகாசனை) கொல்லவரும் மனிதனுக்கும் சிவத்துக்கும் நிகழும் உரையாடல் இப்படி அமைகிறது.
„எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கு தம்பி.. உங்களுக்கு எப்படியோ?“
சிவம்சொல்கிறான்:
„எனக்கும் இருக்கு!“
„அப்படியா... எந்த சாமி?“
நீதான் என்பதுபோல கண்களால் சாடை காட்டுகிறான் சிவம்.
„நானா?“
„ஒருத்தனைக் கொல்லணும்னு வந்துட்டு மனசைமாத்திட்டு மன்னிப்பும் கேட்கிற மனிசன் இருக்கானே.. அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சாமி!“
„மனசை மாத்திக்கிட்டேன் ஆனா சாமி எல்லாம் இல்லைத் தம்பி!“
சிவம் சிரித்துக்கொண்டே சொல்கிறான்:
„இப்படியெல்லாம் நாத்திகம் பேசாதிங்க! ஊரெல்லாம் இந்தமாதிரி நிறைய சாமி இருக்கு.. நம்புங்க!“
கதையின் முடிவில் அன்பே சிவம் தத்துவத்தை அழகாகச் சொல்லிச் செல்லும் கதாசிரியன் கமலகாசன் இலக்கியம் படைக்கவில்லையா?
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
திருமூலர் திருமந்திரம் இது.
இந்தப் பக்தி இலக்கியம் சொன்னதை திரைப்பட வடிவத்தில் நிகழ்காலத்திற்கேற்ப சொல்லிச் செல்கிறார் கமலகாசன்.
திரைப்படங்களில் இலக்கியம் என்பது அதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்பவற்றினூடேதான் நம்மால் அடையாளம் காணப்படுகிறது
இலக்கியவாதிகள் இந்தத்துறையில் ஈடுபடவேண்டும் என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளை இலக்கியவாதிகளாக அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் ஒரு விடயம்தான்.
இலக்கியவாதிகளான எழுத்தாளர்கள் அமரர் கல்கி (கள்வனின் காதலி), அண்ணாதுரை (ரங்கோன்ராதா) மு.கருணாநிதி(மந்திரிகுமாரி) , ராஜாஜி(திக்கற்றபார்வதி), அகிலன்(பாவைவிளக்கு), கண்ணதாசன்(கவலை இல்லாத மனிதன்) , ஜெயகாந்தன் (யாருக்காக அழுதான்),லஷ்மி(இருவர் உள்ளம்) சிவசங்கரி(ஒருமனிதனின்கதை), என்று பலர் எழுதிய கதைகளும் நாவல்களும் திரைவடிவம் பெற்றபோது இலக்கியங்கள் திரைப்படங்களாவதாகப் பேசிக்கொள்ளப்பட்டதே தவிர ஆரம்பகாலங்களில் திரைத்துறைக்குள்ளேயே இருந்த படைப்பாளிகள் பற்றியோ இலக்கியங்கள் பற்றியோ எவரும் அதிகமாக அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.
ஆனால் இயக்குனர்கள் அடையாளம் காணப்பட்டபோது அவர்களுக்குள்ளிருந்த இலக்கியவாதிகளும் அடையாளம் காணப்பட்டார்கள்.
ஸ்ரீதர், .பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாக்கியராஜ், டி.இராஜேந்தர், ஜே.மகேந்திரன், பாலுமகேந்திரா, துரை, விசு, மணிரத்தினம், சங்கர், கமலகாசன், பார்த்திபன், சேரன், தங்கர்பச்சான் என்று எத்தனையோ படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தமது பெயரைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.